உடுமலை: உடுமலை அருகே விவசாய தோட்டத்துக்காக அமைக்கப்பட்ட கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொழுமம் வனச்சரக வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறியுள்ளது. இந்த சிறுத்தை வனப்பகுதியை ஒட்டியுள்ள திண்டுக்கல் மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியில் நுழைந்த சிறுத்தை, பழனிச்சாமி என்பவரது விவசாயத் தோட்டத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலியில் சிக்கியுள்ளது.
அதிலிருந்து வெளியில் வர முடியாமல் நீண்ட நேரம் சிறுத்தை போராடியுள்ளது. இதனைக் கண்ட விவசாயிகள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினர் கோவை கால்நடை மருத்துவர் வெண்ணிலா மற்றும் ஓய்வு பெற்ற மருத்துவர் மனோகரன் தலைமையில் சிறுத்தையை கண்காணித்து, கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்.
மயக்க நிலையில் இருந்த சிறுத்தையை மருத்துவக் குழு ஆய்வு செய்தபோது உடலில் ஆங்காங்கே இருந்த சிறு காயங்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் கூண்டுக்குள் அடைத்த வனத்துறையினர், சிறுத்தையை ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்த பின்னர் அமராவதி வனச்சரகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர். கூண்டில் இருந்து விடப்பட்ட சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.