பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்று, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
நீர் நிலைகளின் காவலன் என்றழைக்கப்படும் பனை மரங்களை வெட்டுவதை தவிர்க்கவும், செங்கல் சூளைகளில் எரிபொருளாக பனை மரங்களை பயன்படுத்தப்படுவதை தவிர்க்கவும் அரசு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதி நிலை அறிக்கையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் பனை மரங்களை பாதுகாக்க தமிழக அரசின் வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பனை மரங்களை வோரோடு வெட்டி விற்பதை தடுக்கவும், செங்கல் சூளைகளில் பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் அரசு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயமாக்கப்படும்.
இதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்படும். இதேபோல் தோட்டக்கலை உதவி இயக்குநர் தலைமையில் வட்டார அளவிலான கண்காணிப்பு குழுவும் அமைக்கப்படும்.
இந்த வட்டார குழு வயல்களில் ஆய்வு செய்து பனை மரங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் கூட்டாக கிராமம் வாரியாக இருப்பு பதிவேடு பராமரித்திட வேண்டும். மேலும், கணக்கிடப்படும் பனை மரங்களின் எண்ணிக்கையை பயிர் சாகுபடி பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்படுவதை வட்டார அளவிலான குழுவால் உறுதி செய்யப்பட வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணையை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கத்தின் மாநில தலைவரும், மாவட்ட பசுமை குழு உறுப்பினருமான எஸ்.ஜே.கென்னடி கூறியதாவது: தமிழர்களின் தேசிய மரமான பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அரசாணை வெளியிட்ட தமிழக முதல்வர், தலைமை செயலர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழர்களின் தேசிய மரமான பனை மரங்கள் தொடர்ந்து வெட்டி அழிக்கப்பட்டு வருகின்றன. பனை மரங்களை பாதுகாக்க வேண்டும். இதற்காக பிரத்யேக குழு அமைக்க வேண்டும் என அரசுக்கு ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தோம். அதன் அடிப்படையில் பனை மரத்தின் முக்கியத்து வத்தை கருத்தில் கொண்டு சிறப்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையை அதிகாரிகள் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றார்.