சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரத்தில், வசிஷ்ட நதிக்குச் செல்லும் நீர் வழித்தட கால்வாய் தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடக்கிறது. | படங்கள்: எஸ்.குரு பிரசாத் | 
சுற்றுச்சூழல்

சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பற்றாக்குறை மழை!

எஸ்.விஜயகுமார்

சேலம்: தென்மேற்குப் பருவமழை கடந்த 3 மாதங்களில், இயல்பை விட குறைவாக, சேலம் மாவட்டத்தில் 19 சதவீதம், நாமக்கலில் 37 சதவீதம், ஈரோட்டில் 31 சதவீதம், தருமபுரியில் 27 சதவீதம், கிருஷ்ணகிரியில் 25 சதவீதம் என பற்றாக்குறையாக பெய்துள்ளது. எனவே, வட கிழக்குப் பருவமழை தொடங்குவதற்குள், நீர்வரத்து கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி, மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

வழக்கமாக, ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழையானது, நடப்பாண்டில் முன்கூட்டியே, அதாவது மே மாத இறுதியிலேயே தொடங்கிவிட்டது. செப்டம்பர் வரை இப்பருவமழைக் காலம் நீடிக்கும் என்றாலும், கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான 3 மாதங்களில் சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் இயல்பு அளவை விட குறைந்த அளவே மழை பெய்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஜூன் முதல் ஆகஸ்ட் முடிய 3 மாத காலத்தில் இயல்பாக 255.5 மிமீ., மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், 19 சதவீதம் குறைவாக 207.2 மிமீ., மட்டுமே மழை பெய்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் இயல்பு அளவு 201.4 மிமீ., ஆனால், அங்கு 37 சதவீதம் குறைவாக, 126.3 மிமீ., மழை பெய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தின் இயல்பு அளவு 158.2 மிமீ. ஆனால் 31 சதவீதம் குறைவாக 109.4 மிமீ., மழை பெய்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தின் இயல்பு அளவு 225.2 மிமீ.. ஆனால் அங்கு 27 சதவீதம் குறைவாக 163.5 மிமீ., மழையே பெய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் இயல்பு அளவு 210.4 மிமீ. ஆனால், அங்கு 25 சதவீதம் குறைவாக 158.1 மிமீ. மழை பெய்துள்ளது. தென்மேற்குப் பருவமழை இன்னும் ஒரு மாதத்துக்குள் முடிவடைந்துவிடும் என்ற நிலையில், பற்றாக்குறை மழையால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தென்மேற்குப் பருவமழை பற்றாக்குறையாக பெய்துள்ளதால், நீர் நிலைகள் வறண்ட நிலையிலேயே உள்ளன. அடுத்த ஒரு மாதத்திலும் தென்மேற்குப் பருவமழை போதுமான அளவு பெய்திடுமா என்பது சந்தேகமே. கிராமம், நகரம் என அனைத்து இடங்களிலும் நிலத்தடி நீரின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனவே, நிலத்தடி நீர் மட்டம் குறைவதால், குடிநீர் தட்டுப்பாடு, பாசனத்துக்கான நீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும். வட கிழக்குப் பருவமழைக் காலத்தில் போதிய மழை பெய்து, தென்மேற்குப் பருவமழை பற்றாக்குறையை ஈடு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

எனினும், நீர் நிலைகளுக்கான வரத்துக் கால்வாய்கள் பல இடங்களில் புதர் மண்டி, தூர் வாரப்படாமல் உள்ளது. உதாரணமாக, ஆத்தூர் நரசிங்கபுரத்தில் உள்ள ஓடையில் நீர்வரத்து கால்வாய், சேலம் பொன்னம்மாப்பேட்டையில் திருமணிமுத்தாற்றில் இருந்து ஏரிகளுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் போன்றவை செடி, கொடிகள் அடர்ந்து புதர்மண்டியுள்ளது. மேலும், ஆறுகளில் இருந்து ஏரிகளுக்கு நீர் திறக்கப் பயன்படும் மதகுகள், பல இடங்களில் சீரமைக்கப்படாமல் உள்ளது.

உதாரணமாக, தலைவாசலில், வசிஷ்ட நதி தடுப்பணை நதியில் இருந்து தியாகனூர், ஆறகழூர் ஏரிகளுக்கு நீர் திறக்கக்கூடிய மதகு பகுதியில் கடந்த ஆண்டு உடைப்பு ஏற்பட்டு, தடுப்பணையில் இருந்து நீர் வீணாக வெளியேறியது. இதுபோன்ற பிரச்சினைகள் உள்ள இடங்களை நீர் வளத்துறையினர் உடனடியாக அடையாளம் கண்டு, போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் வரும் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் நீர்த்தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க முடியும், என்றனர்.

SCROLL FOR NEXT