புதுடெல்லி: 2015 முதல் 2019-ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியாவில் ஒவ்வொரு 1 சதுர கிலோமீட்டர் காடுகள் பரப்பளவு அதிகரித்த போதிலும், 18 சதுர கி.மீ காடுகள் குறைந்துள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது ஒரு மடங்கு காடுகள் பரப்பு அதிகரித்த நேரத்தில், 18 மடங்கு காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
ஐஐடி மும்பையைச் சேர்ந்த பேராசிரியர் ராஜ் ராம்சங்கரன் தலைமையில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் வாசு சத்யகுமார் மற்றும் ஸ்ரீதரன் கௌதம் ஆகியோருடன் இணைந்து இந்த ஆய்வினை நடத்தியுள்ளனர். 2015 முதல் 2019 வரையிலான இந்த 5 ஆண்டு காலத்தில் வனப்பரப்பு மாற்றங்களை மதிப்பிடுவதற்கு கோபர்நிகஸ் குளோபல் லேண்ட் சர்வீஸ் (சிஜிஎல்எஸ்) டிஜிட்டல் வனப்பரப்பு வரைபடங்கள் பயன்படுத்தப்பட்டது.
இந்த காலகட்டத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் காடுகளின் மொத்த பரப்பளவு குறைந்துள்ளது. 2015 முதல் 2019 வரை நாடு முழுவதும் 56.3 சதுர கி.மீ காடுகள் புதிதாக உருவாக்கப்பட்ட நிலையில், 1,032.89 சதுர கி.மீ அளவுக்கு காடுகள் பரப்பளவு குறைந்துள்ளது. இந்த 1,032.89 சதுர கி.மீட்டரில், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டும் கிட்டத்தட்ட பாதியளவு காடுகள் பரப்பளவு குறைந்துள்ளது. அதாவது இந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு 1 சதுர கிலோமீட்டர் வனப்பரப்பளவு அதிகரித்த நேரத்தில், 18 சதுர கி.மீ காடுகள் குறைந்துள்ளது.
ஆய்வின் மிக முக்கியமான கண்டறிதல்களின்படி, புதிதாக உருவாக்கப்பட்ட காடுகளில் பாதிக்கும் மேற்பட்டவை தனியாகவோ அல்லது துண்டுத் துண்டாகவோ உள்ளன. இந்த வகை காடுகளுக்கு பல்லுயிர் சூழலை தக்கவைக்கும் தன்மை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
பெரிய, தொடர்ச்சியான வனப்பகுதிகள் பல்வேறு வனவிலங்குகள் வாழும் சூழலை உருவாக்குகின்றன, சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிக்கின்றன. இதற்கு நேர்மாறாக துண்டு துண்டான காடுகள், விலங்குகளின் இயக்கம் மற்றும் பல்லுயிர் சூழலை சீர்குலைக்கின்றன. வேட்டையாடவும் இனப்பெருக்கம் செய்யவும் பெரிய பரப்பளவு தேவைப்படும் புலி போன்ற விலங்கினங்கள் துண்டுத் துண்டான காடுகளில் உயிர்வாழ போராடுகின்றன. இதனால் மனித - வனவிலங்கு மோதலுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன என்று அந்த அறிக்கை கூறுகிறது.