மதுரை: நெல்லை மாவட்டத்தில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தென்காசியை சேர்ந்த சிதம்பரம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கேரள மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறது. இதை தடுக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018ல் பொதுநல மனு தாக்கல் செய்யப்பபட்டது.
அப்போது நெல்லை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த பதில் மனுவில், நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுகாதாரத் துறை, காவல் துறை, போக்குவரத்து துறை அலுவலர்களை இணைத்து மருத்துவ கழிவுகள் மேலாண்மை குழு அமைக்கபட்டு நெல்லை மாவட்டத்திற்குள் நுழையாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். இருப்பினும் தற்போதும் கேரளாவில் இருந்து நெல்லை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மருத்துவக் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. இதனால் மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கேரளா மாநிலங்களில் இருந்து கொண்டுவரும் மருத்துவ கழிவுகளை முற்றிலும் தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் மாவட்டத்துக்குள் கொண்டு வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.