மதுரை பெருமாள்மலை அடிவாரமான அரிட்டாபட்டி சாலை ஓரத்தில் இறந்து கிடந்த துரும்பன் பூனை (Rusty-Spotted Cat) ஒன்றின் உடலை சூழலியல் ஆர்வலர் விஸ்வா மற்றும் சிவஹர்சன் மீட்டனர்.
பூனை குடும்பத்தில் உள்ள புலி, சிறுத்தை ஆகிய விலங்கினங்கள் பற்றி அனைவரும் அறிவோம். பூனை குடும்பத்தில் உள்ள வெருகு, துரும்பன் பூனை பற்றி பலரும் அறிவதில்லை. துரும்பன் பூனை, பூனை குடும்பத்தின் மிகச்சிறிய இனங்களில் ஒன்றாகும். 2016-ம் ஆண்டு முதல் துரும்பன் பூனைகளின் எண்ணிக்கை அச்சுறு நிலையை எட்டியுள்ளதாகப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் (IUCN) அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பூனைகளின் வாழிடங்களான இலையுதிர் காடுகள் அருகி வருவதாலும் பிளவுபடுவதாலும் இவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.
இதுகுறித்து இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையை சேர்ந்த விஸ்வா கூறுகையில், ”உலகில் காணப்படும் பூனையினங்களில் கரும்பாதப் பூனையும், துரும்பன் பூனையும் அளவில் மிகச்சிறியவைகளாகும். ஈர இலையுதிர் காடுகள், உலர் இலையுதிர் காடுகள், புதர்க்காடுகள், புல்வெளிக் காடுகள் ஆகிய சில குறிப்பிட்ட வகைச் சூழல்களில் மட்டுமே துரும்பன் பூனைகள் காணப்படுகின்றன. துரும்பன் பூனைகள் ஓர் இரவாடியாகும். மேலும், தோற்றத்திலும் சிறியதாக இருப்பதால் வனத்துறையால் நிகழ்த்தப்படும் காட்டு விலங்குகள் கணக்கெடுப்புகளில் கூட இப்பூனைகளின் இருப்பு குறித்து பதிவாவதில்லை.
தமிழ்நாட்டிலும் இப்பூனைகள் குறித்த ஆவணங்களும் பதிவுகளும் அரிதாகவே காணப்படுகிறது. இந்நிலையில் மதுரை அரிட்டாபட்டியில் இறந்த நிலையில் துரும்பன் பூனை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கெனவே மதுரை மாவட்டம் மேலூர் அருகே மலம்பட்டியில் உள்ள பெருமாள்மலை கரடு அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி அன்று துரும்பன் பூனைக்குட்டி ஒன்று வனத்துறையால் மீட்கப்பட்டது.
மேற்சொன்ன 2 நிகழ்வுகளும் மதுரை அழகர்மலை - பெருமாள்மலை பகுதிகளில் துரும்பன் பூனைகளின் வாழிடமாக உள்ளது என்பதை உறுதி செய்கிறது. சாம்பல் தேவாங்கு, உடும்பு, முள்ளெலி, கீரி, துரும்பன் பூனை உள்ளிட்ட காட்டு விலங்குகள் அரிட்டாபட்டி சாலையில் இவ்வாறு விபத்தில் இறப்பது தொடர் கதையாகி வருகிறது. இதனை தடுக்க தமிழ்நாடு அரசும், வனத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.