தூத்துக்குடி மாவட்டத்தில் காற்றாலை, சோலார் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களுக்காக கற்பக விருட்சமான பனைமரங்கள் அழிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரம், தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. பனை மரங்கள் வறட்சியை தாங்கி வளரக்கூடியவை. தமிழ்நாட்டில் பனைமரங்கள் அதிகம் உள்ள மாவட்டமாக தூத்துக்குடி உள்ளது. இந்நிலை யில் தூத்துக்குடி மாவட்டத்தில் காற்றாலை, சோலார் மின் நிலையங்கள், மின்பாதைகள் அமைக்கவும், ரியல் எஸ்டேட் தொழிலுக்காக வும் பனை மரங்கள் அதிகளவில் அழிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி யுள்ளனர்.
இது தொடர்பாக எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான எஸ்எம்ஏ.காந்திமதிநாதன் ‘இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது: தமிழ் நாட்டின் பொருளாதாரம், சுற்றுச்சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரத்தை, தூத்துக்குடி மாவட்டத்தில் காற்றாலை, சோலார் நிறுவனங்கள் வேகமாக அழித்து வருகின்றன. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி, கயத்தாறு வட்டங்களில் காற்றாலை நிறுவனங்கள் தங்களது காற்றாலைகளை நிறுவுவதற்கு எந்தவித முன் அனுமதியும் பெறாமல் பல இடங்களில் பனை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்துள்ளனர்.
பனை மரங்களை வெட்ட வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று தான் வெட்ட வேண்டும் என சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள சூழலில் எந்தவித நடைமுறைகளையும் காற்றாலை, சோலார் நிறுவனங்கள் கடைபிடிக்கவில்லை. தூத்துக்குடி வட்டம் தளவாய்புரம், தட்டப் பாறை, உமரிக்கோட்டை, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வடவல்லநாடு, வடக்கு காரசேரி, பூவாணி மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டத்தில் மணியாச்சி, சவரிமங்கலம் போன்ற பகுதிகளில் தனியார் நிறுவனம் 30-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வேரோடு பிடுங்கி அகற்றியுள்ளது.
இதுபோல் பல காற்றாலை நிறுவனத்தினர் அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகளை துணையோடு பனை மரங்களை வெட்டி அழித்து நாசம் செய்து வருகிறார்கள். இது தொடர்பாக காவல் நிலையங்களில் புகார் அளித்தால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மேலும், ரசாயனம் பயன்படுத்தி பனை மரங்களை பட்டு போக செய்து அழிக்கும் வேலைகளும் நடந்து வருகின்றன. இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக கண்டறிந்து தடுக்க வேண்டும். மேலும், பனை மரங்களை வெட்ட எவ்விதத்திலும் அனுமதி வழங்கக் கூடாது. பனை மரங்களை பாதுகாப்பது மாவட்ட நிர்வாகத்தின் கடமை என்றார்.