மதுரை: தமிழகத்தில் பிளாஸ்ட் பொருட்கள் தடைக்கான அரசாணையை கடுமையாக அமல்படுத்தவும், கண்காணிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த கே.சிரஞ்ஜீவி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழக அரசு மட்காத மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதித்தும் 25.6.2018-ல் அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையில் பிளாஸ்டிக் ஷீட், பிளாஸ்டிக் பேப்பர் கப், பிளாஸ்டிக் டீ கப், பிளாஸ்டிக் டம்ளர், தெர்மாகோல் கப், அனைத்து அளவு மற்றும் தடிமனான பிளாஸ்டிக் கேரி பேக் உட்பட 9 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இப்பொருட்களுக்கு பதிலாக வாழை இலை, தாமரை இல்லை, பேப்பர் சுருள், கண்ணாடி கிளாஸ், உலோக டம்ளர்கள், மூங்கில், மர பொருட்கள், துணி, தாள், சாக்கு பைகள் உட்பட 12 வகையான பொருட்களை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் மற்றும் பிராணிகள் சந்தித்து வரும் ஆபத்துகளை தவிர்க்கும் பொருட்டே பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை எதிர்கால சந்ததியினர் நலனுக்காக பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தை உருவாக்குவதற்காக தமிழக அரசு வழங்கியிருக்கும் பரிசாகும். இந்த அரசாணையால் விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும். ஏழை விவசாயிகள் தாங்கள் தயாரிக்கும் இயற்கை சார்ந்த பொருட்களை விற்க முடியும். விவசாயிகள் இயற்கை சார்ந்த பொருட்களை தயாரிக்க ஊக்குவிக்கும் போது விவசாயிகள் தாங்கள் தயாரித்த பொருட்களை உழவர் சந்தை போன்ற இடங்களில் விற்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
நிலம் மற்றும் வனத்தில் பிளாஸ்டிக் பொருட்களை குவிப்பதால் எதிர்காலச் சந்ததியினருக்கு பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது வரும். இதனால் பிளாஸ்டிக் தடை அரசாணையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இதை கண்காணிக்க கண்காணிப்பு குழு அமைத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
எனவே, மட்காத மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை அரசாணையை கடுமையாக அமல்படுத்தவும், அரசாணையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், போக்குவரத்து தொழிற்சாலைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துகிறதாக என்பதை கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.ஸ்ரீமதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சா்பில் வழக்கறிஞர் கே.நீலமேகம், ஆர்.மேஜர்குமார் வாதிட்டனர். பின்னர் நீதிபதிகள், பிளாஸ்டிக் தடை தொடர்பான அரசாணையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இந்த அரசாணை அமல்படுத்தப்படுவதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.