சுற்றுச்சூழல்

வாய்க்காலை அடைத்திருந்த குப்பை - கண்டவுடன் களம் இறங்கிய திருவாரூர் தன்னார்வலர்கள்!

செய்திப்பிரிவு

கொரடாச்சேரி அருகே குப்பை அடைத்திருந்த வாய்க்காலை சுத்தம் செய்த தன்னார்வலர்களின் செயலுக்கு விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மேட்டூர் அணை திறக்கப்பட்டு கடைமடையை தண்ணீர் சென்றடைந்தாலும், பல இடங்களில் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் சென்றடைய வில்லை. இதனால், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், வாய்க்கால்களில் ஆங்காங்கே குப்பை அடைத்து நீரோட்டத்தை தடை செய்து வருகிறது. இந்நிலையில், கொராச்சேரி அருகே ஊர்குடி வாய்க்காலில் குப்பை அடைத்து, நீரோட்டம் தடைபடுவதை கண்ட திருவாரூர் தன்னார்வலர்கள் அமைப்பினர், வாய்க்காலில் இறங்கி குப்பையை அகற்றி நீரோட்டத்தை சரி செய்தனர்.

திருவாரூரை மையமாகக் கொண்டு செயல்படும் வனம் தன்னார்வலர்கள் அமைப்பு, கஜா புயலின்போது இழந்த மரங்களை மீட்கும் வகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் கொரடாச்சேரி அருகே மரக் கன்றுகளை நடச் சென்ற போது, வழியில் ஊர்குடி என்ற இடத்தில் ஊர்குடி கிளை வாய்க்காலில் குப்பை தேங்கி நீரோட்டம் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டிருந்ததை கண்டனர்.

இதையடுத்து, அந்த அமைப்பினர் உடனடியாக வாய்க்காலில் இறங்கி நீரோட்டத்தை அடைத்திருந்த குப்பையை அகற்றினர். 4 மூட்டைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள், 2 மூட்டைகளில் கண்ணாடி மதுபாட்டில்கள், இவை தவிர 100 கிலோ அளவிலான கழிவுகளை 2 மணி நேரமாக அகற்றினர்.

இந்தப் பணியை மேற்கொண்ட வனம் தன்னார்வலர் அமைப்பைச் சேர்ந்த கலைமணி, குருமூர்த்தி, பாரதி, ராஜன், செல்லமீனாள், புதுநிலா, ஆதிகேசவன், பால வெங்கடேஷ், விக்னேஷ் உள்ளிட்ட இளைஞர்களை விவசாயிகள், கிராம மக்கள் பாராட்டினர்.

மாவட்டம் முழுவதும் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் வரவில்லை என போராட்டங்கள் நடைபெறும் வேளையில், வாய்க்காலில் இறங்கி நீரோட்டத்தை சரி செய்த தன்னார்வலர்களின் செயல் சமூக வலைதளங்களிலும் மிகுந்த பாராட்டை பெற்று வருகிறது.

SCROLL FOR NEXT