சுற்றுச்சூழல்

காமேஸ்வரம் கடற்கரைக்கு விரைவில் ‘நீலக்கொடி’ அங்கீகாரம்!

கரு.முத்து

நாகை அருகே உள்ள காமேஸ்வரம் கடற்கரைக்கு ‘நீலக்கொடி அங்கீகாரம்’ என்ற சர்வதேச சான்றிதழ் விரைவில் கிடைக்கவுள்ளது. இதையடுத்து அங்கு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

உலகின் பல்வேறு கடற்கரைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை, கடற்கரை தூய்மை, அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மதிப்பீடு செய்து டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை எனும் அமைப்பு சிறந்த கடற்கரைக்கு ‘நீலக்கொடி சான்றிதழ்’ வழங்கி வருகிறது. இந்த சான்றிதழ் கிடைப்பதன் மூலம், கடற்கரைகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதுடன், சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இதுவரை கோவளம் கடற்கரைக்கு ‘நீலக்கொடி சான்றிதழ்’ வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது மேலும் 10 கடற்கரைக்கு ‘நீலக்கொடி சான்றிதழ்’ பெற தமிழக அரசு தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில், முதல்கட்டமாக 4 கடற்கரைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, சென்னை மெரினா, ராமேசுவரம் அரியமான் கடற்கரை, கடலூர் சில்வர் கடற்கரை, நாகை அருகே உள்ள காமேஸ்வரம் கடற்கரை ஆகியவை ‘நீலக்கொடி சான்றிதழ்’ பெற உள்ளன.

இந்நிலையில், நாகை காமேஸ்வரம் கடற்கரையை மேம்படுத்துவதற்காக ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டு, கடற்கரை பகுதிகளில் மூங்கில் இருக்கைகள், கண்காணிப்பு கோபுரங்கள், சாய்தள இருக்கைகள், மாற்றுத் திறனாளிகள் வந்து செல்ல தனிப் பாதை அமைக்கும் பணிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதத்தில் கடற்கரை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

நீலக்கொடி சான்றிதழ் சர்வதேச அளவிலானது என்பதால், இச்சான்றிதழ் பெறும் கடற்கரைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதுடன், சுற்றுலா பயணியர் வருகை அதிகரிக்கும். இதனால், உள்ளூர் வணிகம், பொருளாதாரம் வளர்ச்சி பெறும். வேளாங்கண்ணி, நாகூர், சிக்கல், எட்டுக்குடி உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களுக்கு வரும் பயணிகள் காமேஸ்வரம் கடற்கரைக்கும் வருவார்கள் என்பதால் என்பதால் நாகை மாவட்ட சுற்றுலா மேலும் வலுப்பெறும்.

SCROLL FOR NEXT