வழக்கமாக ஒரு நாளில் சூரியன் உதித்து மறையும் காலம் என்பது ஏறத்தாழ 12 மணி நேரமாக இருக்கும். ஆனால், ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி அதிகபட்சமாக 14 மணி நேரமாக இருக்கும். எனவே, ஜூன் 21-ம் தேதி என்பது வடக்குக் அரைக்கோளத்தில் ஆண்டின் மிக நீண்ட பகல் நாள் என அழைக்கப்படுகிறது.
இதுவே கோடைக் கால கதிர் திருப்ப நாள் (Summer Solstice) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டின் நீண்ட பகல்நாள் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நாள், சூரியன் கடக ரேகையில் (Tropic of Cancer) நேராக சாய்ந்து ஒளிர்கின்ற நாள். இதனால், பூமியின் வடக்குப் பகுதி அதிக நேரம் சூரிய ஒளியைப் பெறுகிறது.
பூமி தனது அச்சில் 23.5° சாய்வு கொண்டுள்ளது. பூமி சூரியனைச் சுற்றும்போது, இந்த சாய்வு காரணமாக பருவநிலைகள் பனிக்காலம், கோடைக் காலம், மழைக்காலம் போன்றவை ஏற்படுகின்றன. கோடைக்கால கதிர் திருப்ப நாளில், சூரிய ஒளி அதிக நேரம் பூமியின் ஒரு பகுதியைத் தாக்குகிறது. இதனால் பகல் நேரம் அதிகமாகும்.
நள்ளிரவு சூரியன்: இந்த காலக்கட்டத்தில் ஆர்க்டிக் வட்டத்துக்கு அருகிலுள்ள நாடுகளான நார்வே, பின்லாந்து, அலாஸ்கா, கிரீன்லாந்தில் சூரியன் மறையாத நாள் என்று அறியப்படும் ‘நள்ளிரவு சூரியன்’ நிகழ்வை நேற்று அனுபவித்தன. இந்த நாட்களில், சூரியன் இரவிலும் முழுமையாக மறையாமல் காணப்படும்.
காலண்டர் ஆண்டு 365 நாட்கள் கொண்டது. ஆனால் பூமி சூரியனைச் சுற்றி ஒரு சுற்று முடிக்க சராசரியாக 365.25 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. இதனால் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கும் ஒரு ‘லீப் ஆண்டு’ என 366 நாட்கள் சேர்க்கப்படுகிறது. இதுவே கோடைக்கால கதிர் திருப்ப நாள் ஜூன் 20 முதல் 22 வரை மாறக்கூடியதற்கான காரணம்.
தமிழகத்தில் தெரியவில்லை: இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருச்சி மாவட்டச் செயலாளர் மணிகண்டன் கூறியபோது, ‘‘டில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் இந்த நாளில் சூரியன் அதிகாலையில் உதித்து தாமதாக மறைந்தது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, டில்லியில் பகல்பொழுதின் நேரம் 13 மணி நேரம் 58 நிமிடங்களாக இருந்தது. டில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் அதிகாலை 5.23 உதயமாகும் சூரியன் இரவு 7.21 மணிக்கு மறைந்தது. அதை அவர்கள் கண்கூடாக பார்க்க முடிந்தது. ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை கண்களால் பார்க்க முடியவில்லை. இனிவரும் காலங்களில் காலநிலை மாற்றத்தால் பலநாட்கள் நாம் நீண்ட பகலை சந்திக்க நேரிடும்’’ என்றார்.