சென்னை மாநகரில் பெருமழை காலங்களில் வெள்ளநீர் வழிந்தோடும் இயற்கை வடிகாலாக கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவை உள்ளன. ஆனால் மழைக்காலம் தவிர்த்து, இந்த 3 நீர்வழித்தடங்களிலும் ஆண்டு முழுவதும் கழிவுநீர் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அடையாறு சீரமைப்பு திட்டம், கூவம் சீரமைப்பு திட்டங்களுக்கு பல 100 கோடி ரூபாய்களை அரசு செலவிட்டதால், அவற்றில் ஓடும் கழிவுநீரின் அளவு குறைந்துள்ளது.
ஆனால் சென்னை மாநகரில் சுமார் 55 கிமீ நீளத்துக்கு பயணிக்கும் பக்கிங்ஹாம் கால்வாயில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மற்ற 2 நீர் வழித்தடங்களை விட மோசமாக கழிவுநீர் தேங்கி மாசுபட்டுள்ளது. வட சென்னையில் சென்னை குடிநீர் வாரியமே, வீடுகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை தினமும் விட்டு மாசுபடுத்தி வருகிறது. இதனால் இதிலிருந்து உருவாகும் கியூலெக்ஸ், அனாபிலஸ் போன்ற கொசுக்களால் கால்வாயை ஒட்டியுள்ள மக்கள் ஆண்டு முழுவதும் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
மாநகராட்சி நிர்வாகம் கொசு ஒழிப்பு பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஈடுபடுத்தியுள்ளது. கொசு ஒழிப்பு மருந்துக்காக கோடிகளில் செலவிட்டு வருகிறது. இருப்பினும் கொசுவை ஒழிக்கவில்லை. கோடையில் வெப்பம் அதிகரிக்கும்போதும், அக்டோபர்- டிசம்பர் மாதங்களில் அதிக மழை பெய்து, தேங்கியுள்ள நீரும், அதில் உள்ள கொசு முட்டை, புழுக்களும் அடித்துச் செல்லப்படுவதாலுமே கொசுக்கள் ஒழிகிறது. மாநகராட்சியின் கொசு ஒழிப்பு நடவடிக்கை வீண் செலவு என்பது விவரம் அறிந்தவர்களின் கருத்தாக உள்ளது.
இதற்கிடையில் சென்னை மாநகராட்சியின், அடையாறு மண்டல அலுவலர், “பக்கிங்ஹாம் கால்வாயில் தேவையற்ற கழிவுகள், ஆகாயத்தாமரை செடிகள், கோரை புற்கள் முளைத்து இருப்பதாலும், நீர் வழிந்தோட முடியாமல் தேங்கி, கொசு உற்பத்திக்கு காரணமாக உள்ளது. அதனால் மேற்கூறியவற்றை அகற்றி, நீர் வழிந்தோட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீர்வள ஆதாரத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் உன்னிகிருஷ்ணன், மாநகராட்சிக்கும், நீர்வள ஆதாரத்துறைக்கும் முறைப்படி தகவல் தெரிவித்துவிட்டு, பக்கிங்ஹாம் கால்வாயில் தேங்கியுள்ள நீர் மாதிரிகளை என்ஏபிஎல்(NABL), என்ஏபிஇடி (NABET) அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் கடந்த மாதம் ஆய்வு செய்தார்.
இதன் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. அதில் அதிக அளவில் மனித கழிவுகள் நிறைந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவர், பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுநீர் தேங்குவதை தடுக்கவும், கொசு உற்பத்தியை தடுக்கவும் வலியுறுத்தி, மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் ஜெயந்தி, மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், நீர்வள ஆதாரத்துறை செயலர் ஜெ.ஜெயகாந்தன் ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக உன்னிகிருஷ்ணன், இந்து தமிழ் திசை செய்தியாளரிடம் கூறியதாவது: பெருநகரம் மற்றும் மாநகர பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நீர்நிலைகளில் விடும்போது, அதன் தரம் எப்படி இருக்க வேண்டும் என, தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2019-ம் ஆண்டு தீர்ப்பளித்துள்ளது. அதில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள நீரின் மாசு 10 மடங்குக்கு மேல் அதிகமாக உள்ளது.
இந்த ஆய்வு முடிவில், ஒரு லிட்டர் நீரில் டிஎஸ்எஸ் (Total Suspended Solids) அளவு 10 மி.கி-க்கு பதிலாக 1806 மி.கி (180 மடங்கு), சிஓடி (Chemical Oxygen Demand) 50 மி.கி-க்கு பதிலாக 516 மி.கி (10.32 மடங்கு), பிஓடி (Bio Chemical OXygen Demend) 10 மி.கி-க்கு பதிலாக 123 மி.கி (12.3 மடங்கு) உள்ளது. ஃபீகல் கோலிபோம் (Fecal Coliform) 100 மி.லி. நீரில், 230 எம்பிஎன்-க்கு பதிலாக 1600 எம்பிஎன் (7 மடங்கு) உள்ளது.
இந்த முடிவுகளை பார்க்கும்போது, இந்த நீரில் ஆக்சிஜனின் அளவு குறைந்து, இந்த நீர்நிலைகளில் மீன், தவளை, உள்ளிட்ட உயிரினங்கள் வாழமுடியாத நிலையும், இயற்கை உணவு சங்கிலி உடைபடும் நிலையும் ஏற்படும். மேலும் ஃபீகல் கோலிபோம் 1600 எம்பிஎன் இருப்பது, கழிவுநீரில் மனித கழிவுகள் நிறைந்திருப்பதை காட்டுகிறது. இதன் மூலம் மாநகராட்சியும், நீர்வள ஆதாரத்துறையும், இந்த துறைகளை கண்காணிக்க வேண்டிய மாசுக்கட்டுப்பாடு வாரியமும் தனது கடமையிலிருந்து தவறியுள்ளன.
இந்த கழிவுநீரில் தான் கியூலெக்ஸ், அனாபிளஸ் போன்ற மலேரியா, யானைக்கால் நோய்களை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. மேலும் உயிர்கொல்லி மற்றும் தொற்றுநோய் சட்டம்-1897ன்படி அறிவிக்கை செய்யப்பட்ட நோயான டெங்கு மற்றும் சிக்குன் குன்யா, ஜிகா போன்ற நோய்களை பரப்பும் ஏடீஸ் கொசுக்களும், கழிவுநீரில் உற்பத்தியாவதை கொல்கத்தா மாநகராட்சி தலைமை பூச்சியியல் வல்லுநர் உறுதி செய்துள்ளார். பல்வேறு ஆய்வறிக்கைகளும் அதை உறுதி செய்துள்ளன.
அதனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் - 1986, பிரிவு-9, துணை பிரிவு 1-ன் கீழ் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க வலியுறுத்தி மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர், மாநகராட்சி ஆணையர், நீர்வள ஆதாரத்துறை செயலர் ஆகியோரிடம் மனு அளித்திருக்கிறேன். இந்த சட்டப்பிரிவின் கீழ் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சுற்றுச்சூழல் பாதிப்பை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இது தொடர்பாக நீர்வள ஆதாரத்துறை செயலர் ஜெ.ஜெயகாந்தனிடம் கேட்டபோது, “நீர் வழிந்தோட ஏதுவாக பக்கிங்ஹாம் கால்வாயில் சுமார் ரூ.4.90 கோடியில் 35 கி.மீ. நீளத்துக்கு தூர் வாரும் பணி விரைவில் தொடங்கப்படும்” என்றார்.