கோவை நரசீபுரத்தில் சுற்றுச்சுவரை இடித்து வீட்டுக்குள் நுழைந்த காட்டு யானை தவிடு, நிலக்கடலையை சாப்பிட்டு சென்றது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், மதுக்கரை, ஆனைகட்டி பகுதிகளில் தற்போது காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நரசீபுரம் அடுத்த வைதேகி நீர்வீழ்ச்சி செல்லும் பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவு விவசாயி பாலு என்பவரின் வீட்டின் சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற ஒற்றை யானை வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த தவிடு மற்றும் நிலக்கடலையை சாப்பிட்டது.
இதையடுத்து, போளுவாம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனவர் சசிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் பாலுவின் வீட்டிற்கு வாகனத்தில் வரும்போது வாகனம் நடு வழியில் பழுதாகி நின்றது. உடனே, அப்பகுதி மக்கள் மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து வனத்துறையினரை அழைத்து சென்று யானையை விரட்டினர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, “வனத்தில் இருந்து இரவு நேரங்களில் வெளியேறும் யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. தற்போது ரேஷன் அரிசி மற்றும் கால்நடைகளுக்கு வைக்கப்படும் புண்ணாக்கு, தவிடுகளை சாப்பிடுவதற்காக கதவை உடைத்துக் கொண்டு யானை வீட்டுக்குள் வந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் யானைகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல யானையை விரட்ட ஒதுக்கப்பட்டுள்ள வனத்துறையின் சிறப்பு வாகனங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும்” என்றனர்.