மதுரை: அமராவதி ஆற்றில் நேரடியாக கழிவுநீர் கலப்பது தொடர்பாக வருவாய்த் துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம் செங்குந்தபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நதின் சூர்யா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “கரூர் மாவட்டம் திருமாநிலையூர் மற்றும் கலங்கரை விளக்க பகுதியில் கழிவுநீர் நேரடியாக அமராவதி ஆற்றல் விடப்படுகிறது. இதனால் ஆற்று நீரின் தரம் படிப்படியாக குறைந்து விஷமாக மாறிவருகிறது. இது தொடர்பாக நான் அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அமராவதி ஆற்றில் கழிவு நீர் நேரடியாக கலப்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் வரும் காலங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என கூறிவிட்டு அதிகாரிகள் சென்றுவிட்டனர். உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்கிறது. இது தொடர்ந்தால் வருங்கால தலைமுறையினருக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, திருமாநிலையூர், கலங்கரை விளக்கப் பகுதிகளில் அமராவதி ஆற்றில் நேரடியாக கழிவு நீர் கலப்பதை தடுத்து அமராவதி ஆற்றை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி. புகழேந்தி அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், அமராவதி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை எவ்வாறு அனுமதிக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினர். அப்போது அரசு தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், அமராவதி ஆற்றின் தற்போதைய நிலை குறித்து தமிழக வருவாய்த்துறை செயலர், கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 19-க்கு ஒத்திவைத்தனர்.