படங்கள்: என்.ராஜேஷ் 
சுற்றுச்சூழல்

தூத்துக்குடி மாநகராட்சி சாக்கடை கழிவுநீரால் அழியும் உப்பளங்கள்!

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் மாநகராட்சி சாக்கடை கழிவுநீர் உப்பளங்களில் தேங்கி உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உப்பின் தரம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழல் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் மிக பழமையான காளவாசல் உப்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் 192 உறுப்பினர்கள் உப்பளங்களை அமைத்துள்ளனர். அரசு புறம்போக்கு நிலத்தை குத்தகைக்கு எடுத்து இந்த உப்பளங்களை அவர்கள் அமைத்துள்ளனர். இந்த நிலத்துக்கு உப்பு உற்பத்தியாளர்கள் தவறாமல் வரி மற்றும் குத்தகை செலுத்தி வருகின்றனர்.

இந்த உப்பளங்களை நம்பி சுமார் 300 குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் உற்பத்தியாகும் உப்பு சிறுமணியாக டைமண்ட் வடிவில் கற்கண்டு போன்று சிறியதாக தூய வெண்மையாக இருக்கும். இதனால் இப்பகுதி உப்புக்கு தனி மவுசு உண்டு. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக இப்பகுதி உப்பளங்கள் மாநகராட்சி சாக்கடை கழிவுநீரால் பெரும் ஆபத்தை சந்தித்து வருகின்றன. உப்பின் தரம் பாதிக்கப்படுவதுடன், பெரும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் குடியிருப்பு பகுதியில் வெளியாகும் கழிவுநீரை கடலில் கொண்டு சேர்ப்பதற்காக இந்த பகுதி வழியாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் அமைத்துள்ளனர். இந்த கால்வாயை கடற்கரை வரை கொண்டு செல்லாமல் கடற்கரையில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உப்பள பகுதியில் அப்படியே விட்டுள்ளனர். இதனால் கால்வாயில் வரும் கழிவுநீர் செல்வதற்கு வழியின்றி உப்பள பகுதியில் பெரிய குளம் போல தேங்கி நிற்கிறது. இந்த பகுதி கடல் மட்டத்தை விட தாழ்வாக இருப்பதால் கழிவுநீர் கடலுக்கு செல்லவும் வழியில்லை.

இந்தப் பகுதியில் மாநகராட்சி நுண் உரம் செயலாக்க மையம், கல்லறை தோட்டம் மற்றும் திருவள்ளுவர் நகர் குடியிருப்பு பகுதி போன்றவை இருப்பதால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் வரை மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார் காளவாசல் உப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் உறுப்பினரான தி.பெருமாள்.

இது தொடர்பாக 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் அவர் கூறியது: தூத்துக்குடி மாநகராட்சி திட்டமிட்டு முறையாக கழிவுநீர் கால்வாயை கட்டாத காரணத்தால் கழிவுநீர் செல்ல வழியின்றி உப்பள பகுதியில் குளம்போல தேங்கி நிற்கிறது. இதனால் நிலத்தடி நீர் மாசுப்படுகிறது. சுற்றுச்சூழல் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.

மேலும், நிலத்தடி நீரின் உப்பு தன்மை வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது. உப்பு உற்பத்தியாவதற்கு நீரின் உப்பு தன்மை குறைந்தபட்சம் 25 டிகிரி இருக்க வேண்டும். அதற்கு கீழ் குறைந்தால் உப்பு உற்பத்தியாகாது. கழிவுநீர் பிரச்சினையால் பலர் உப்பு உற்பத்தியை கைவிட்டுவிட்டனர். தொடர்ந்து இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் உப்பு உற்பத்தி முற்றிலும் முடங்கும்.

உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், பண்டல் போடுவோர், ஏற்றுமதியாளர்கள், வியாபாரிகள் என அனைவரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். இது தொடர்பாக தமிழக முதல்வர் வரை மனு அனுப்பியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே, இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டு உப்பு தொழிலை பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT