சுற்றுச்சூழல்

அரக்கோணம் அருகே தண்ணீரின்றி காய்ந்து வரும் நெற்பயிர்கள்!

அரக்கோணம் அருகே போதிய தண்ணீரின்றி நெற்பயிர்கள் காய்ந்து வருவதை தவிர்க்க, மின்மாற்றியை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பள்ளியாங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் அதைச்சார்ந்த தொழிலை செய்து வருகின்றனர். குறுவை சாகுபடிக்கு பள்ளியாங்குப்பம், வளர்புரம், கீழாந்தூர், மூதூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கு மேலாக நெற்பயிரை விவசாயிகள் நடவு செய்துள்ளனர். பெரும்பாலான மக்கள் கிணற்று நீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளியாங்குப்பம் பகுதியில் சுமார் 20 விவசாயிகளின் நிலங்களில் 50 ஏக்கர் நிலத்துக்கு மேல் நெற்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. அந்த விவசாய நிலங்களுக்கு தேவையான மின் இணைப்பு வழங்கும் இச்சிப்புத்தூர் துணை மின் நிலையத்திலிருந்து தனியாக மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றியில் பழுது ஏற்பட்டதால் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக பழுதை சரி செய்யாமல் மின்வாரிய ஊழியர்கள் காலம் கடத்தி வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, “பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரின்றி முற்றிலும் காய்ந்து நிலம் வறட்சி அடைந்து ள்ளது. விவசாய நிலங்கள் வறண்ட நிலங்களாக காணப் படுகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் 3 முறை இந்த மின்மாற்றி பழுதடைந்துள்ளது. ஒவ்வொரு முறையும் விவசாயிகளிடம் வசூல் செய்து கொடுத்தால் மட்டுமே மின்மாற்றி சரி செய்து தருகின்றனர். இந்த முறை வசூல் செய்து தராததால் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக நெற்பயிர் தண்ணீரின்றி வாடி வதங்கி விட்டது. ஏக்கருக்கு 15,000 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் இழப்பிடாவது அரசு வழங்க வேண்டும் " என்றனர்.

இது குறித்து இச்சிப்புத்தூர் துணை மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, "விவசாயிகள் தாங்களாகவே மின்மாற்றியை இயக்கி தங்கள் தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர். முறையாக இயக்க தெரியாததால் அடிக்கடி மின்மாற்றி பழுதாகிறது. விரைவில் புதிதாக வேறொரு மின்மாற்றி அமைத்து மின் விநியோகம் சீரமைக்கப்படும்" என்றனர்.

SCROLL FOR NEXT