சுற்றுச்சூழல்

சிறுகமணி அருகே ஆக்கிரமிப்பால் சுருங்கிய வாய்க்கால்கள்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி மாவட்டம் சிறுகமணி அருகே சின்னப்பனையூர் என்ற இடத்தில் காவிரியின் கிளை வாய்க்காலான அய்யன் வாய்க்காலிலிருந்து, கொடிங்கால் வடிகால் வாய்க்கால் தலைப்பு தொடங்கி, அணலை, திருப்பராய்த்துறை, கொடியாலம், புலிவலம் அருகில் மணல் போக்கியில் இணைந்து பேரூர், மருதாண்டக்குறிச்சி வழியாக குடமுருட்டி ஆற்றில் கலக்கிறது.

கொடிங்கால் வாய்க்கால் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 70 அடி முதல் 120 அடி வரை அகலம் கொண்ட இந்த வாய்க்கால், தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு பல இடங்களில் 20 அடியாக சுருங்கி காணப்படுகிறது. அதேபோல, நீச்சல்குழி கண்ணாறு வாய்க்காலானது, ராமவாத்தலை தலைப்பில் தொடங்கி எலமனூர் பகுதியில் 300 ஏக்கருக்கு மேல் பாசனம் வழங்கி, கொடிங்கால் வாய்க்காலில் கலக்கிறது. 16- 20 அடி வரை அகலம் உள்ள இந்த வாய்க்காலும் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு 5- 6 அடியாக சுருங்கி காணப்படுகிறது.

இந்த இரு வாய்க்கால்களையும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு முறையாக தண்ணீர் செல்வதுடன், மழை, வெள்ளக் காலங்களில் எந்த பாதிப்பும் இருக்காது என்கின்றனர் அப்பகுதி விவசாயிகள். இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் அயிலை சிவசூரியன் கூறியது: கொடிங்கால் வாய்க்காலை பல இடங்களில் ஆக்கிரமித்து தென்னை மரங்கள் வைத்துள்ளனர்.

இந்த ஆக்கிரமிப்பை அகற்றினால், பாசன வசதி தடையின்றி கிடைப்பதுடன், இந்த வாய்க்கால் கரையானது இப்பகுதி மக்களுக்கு போக்குவரத்துக்கான மிகப்பெரிய வழித்தடமாக இருக்கும். இதனால், இப்பகுதி மக்கள் கரூர் - திருச்சி பிரதான சாலைக்கு வரவேண்டிய அவசியம் இருக்காது. மேலும், போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், சாலை விபத்துகளும் தவிர்க்கப்படும்.

மேலும், கொடிங்கால் வடிகாலில் வாய்க்காலில் எலமனூர் அருகே உள்ள 4 மதகுகள் கொண்ட கலிங்கியும், சுபையபுரம் அருகில் மேக்குடி பகுதிக்கு பாசனம் அளிக்கும் தடுப்பணையும் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து உள்ளது. அவற்றையும் சீரமைக்க வேண்டும் என்றார்.

அளந்து கொடுக்குமா வருவாய் துறை? - இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘எந்தெந்த இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ள என்பதை வருவாய் துறையினர் அளந்து ‘படிவம் 1’ வழங்கினால் தான் நாங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும். நாங்களாக சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றினால் அந்தப் பகுதி மக்கள் பிரச்சினை செய்வார்கள். மேலும், பட்டா உள்ள இடங்களை ஆக்கிரமிப்பு என தவறுதலாக எடுத்துவிட்டால், நீதிமன்ற வழக்குகளை சந்திக்க வேண்டி உள்ளது. எனவே, வருவாய் துறையினர் படிவம் தந்தால், ஆக்கிரமிப்புகளை அகற்ற தயாராக உள்ளோம்’’ என்றனர்.

70 சதவீத பணிகள் நிறைவு! - இதுகுறித்து ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது, ‘‘இந்த 2 வாய்க்கால்களிலும் ஏற்கெனவே 70 சதவீத அளவுக்கு அளந்துள்ளதாக அளவையர்கள் தெரிவித்தனர். இந்தப் பணிகளை விரைந்து முடித்து நீர்வளத் துறையினருக்கு விரைவில் படிவம் வழங்கப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT