சுற்றுச்சூழல்

சென்னை பல்கலைக்கழகத்தில் 10,000 பூர்வீக மரக்கன்றுகள் நடல்

செய்திப்பிரிவு

உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடும் விதமாக கரூர் வைஸ்யா வங்கி (KVB), சென்னைப் பல்கலைக்கழகம் - கம்யூனிட்ரீ தொண்டு நிறுவனம் இணைந்து பல்கலைக்கழக வளாகத்தில் 10,000 பூர்வீக மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை நகரின் பசுமையை மேம்படுத்துவதையும், நீண்டகால பல்லுயிர் பெருக்கத்தையும் இந்நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், சமூக தன்னார்வலர்கள், பிற சமூக உறுப்பினர்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

நிகழ்வில் கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் - தலைமை நிர்வாக அதிகாரி பி. ரமேஷ் பாபு பேசுகையில், "உலக சுற்றுச்சூழல் தினம் என்பது இந்த பூமியை பாதுகாப்பதற்கான நமது கடமையை நினைவூட்டுகிறது. கரூர் வைஸ்யா வங்கியின் வழியாக சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 10,000 மரங்களை நட்டு இந்த நாளைக் கொண்டாடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இது வருங்கால சந்ததியினருக்கு பசுமையான, ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முன்னெடுப்பாகும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர் எஸ். ஏழுமலை பேசுகையில், "கரூர் வைஸ்யா வங்கியுடனான இந்த கைகோர்ப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பை உணர்த்தும் ஓர் அர்த்தமுள்ள செயல்பாடாகும். பல்கலைக்கழகங்கள் கற்றல் மையங்கள் மட்டுமல்ல, மதிப்புகளை வளர்க்கும் இடங்களும் கூட. இந்த மரங்கள் நடும் செயல்பாட்டின் மூலம், எங்கள் மாணவர்கள் சுற்றுச்சூழலின் பாதுகாவலர்களாக மாற நாங்கள் வாய்ப்பளிக்கிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT