இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் வேளாண் மாணவருக்கு தங்கப் பதக்கத்துடன் கூடிய நம்மாழ்வார் விருது இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் என்று உலக சுற்றுச்சூழல் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்தார்.
தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறியபோது நாம் ஏழைகளாக இருந்தோம். உணவுப் பற்றாக்குறை நிலவியது. ஆனால், ஆங்கிலேயர்வருகைக்கு முன்பு ஒருபோதும் உணவுப் பற்றாக்குறை இருந்ததில்லை.
1800-களில் தமிழகத்தில் உணவு உற்பத்தி அதிமாக இருந்துள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் 200 ஆண்டுக்கு முன்பு ஹெக்டேருக்கு 6 டன் அளவுக்கு நெல் விளைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். உழவர்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டதால், விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ஆங்கிலேயர் ஆட்சியில் பல்வேறு பஞ்சங்களை எதிர்கொண்டோம். ஆனால், அதற்கு முன்பாக இந்தியாவில் எந்தப் பஞ்சமும் இருந்ததில்லை. நாடு சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் உணவுப் பற்றாக்குறை இருந்ததால், தானிய உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த நேரத்தில்தான் பசுமைப் புரட்சி உண்டானது. வீரிய வித்துகளும், ரசாயன உரங்களும் பயன்படுத்தப்பட்டன. இதனால் உணவு உற்பத்தி பல மடங்கு அதிகரித்தது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தோம்.
தற்போது உணவு உற்பத்தி அதிகரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். இதற்கு காரணம் நமது விவசாயிகள்தான். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நான், உயர்நிலைப் பள்ளிக்கு செல்லும் வரை விவசாயப் பணிகளில் குடும்பத்தாருக்கு உதவியாக இருந்துள்ளேன். தற்போது அளவுக்கு அதிகமாக ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் நிலம் சீர்கெட்டுள்ளது.
உணவு உற்பத்தி குறைவாக இருந்த காலத்தில் ரசாயன உரங்கள் தேவைப்பட்டன. ஆனால், உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் நாம் ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதில் இருந்து விலகி, இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும். இயற்கை உரங்களையும், பாரம்பரிய விவசாய முறைகளையும் பயன்படுத்தி உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியும். இதை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் போன்ற இயற்கை விவசாயிகள் நிரூபித்துள்ளனர். அந்த வகையில், இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவருக்கு தங்கப் பதக்கத்துடன் கூடிய 'நம்மாழ்வார் விருது' ஏற்படுத்தப்படும். அந்த விருது இந்த ஆண்டு முதல் வழங்கப்படும். இவ்வாறு ஆளுநர் பேசினார். முன்னதாக, சாதனை புரிந்த விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் நிர்வாகிகளை ஆளுநர் கவுரவித்தார்.