கோவை: மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை வனப்பகுதியில் மீட்கப்பட்ட குட்டியை முகாமில் வைத்து பராமரிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. மேலும், ட்ரோன் மூலம் தாய் யானையை தேடும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரக பகுதியில் கடந்த 27-ம் தேதி, பிறந்து 10 மாதமே ஆன ஆண் குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர். குட்டி யானையை அதன் தாயுடன் சேர்க்க வேண்டி தாய் யானையை வனத்துறையினர் தேடும் பணியை தொடங்கினர். குட்டி யானை கண்டறியப்பட்ட இடம் சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகளும், தாய் யானையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறுமுகை வனச்சரகர் மனோஜ் மேற்பார்வையில் குட்டி யானை கண்டறியப்பட்ட வனத்தையொட்டிய பவானி ஆற்றின் கரையோர பகுதிகளிலும் தாய் யானையை தேடி வருகின்றனர். இதனிடையே ட்ரோன் கேமரா உதவியுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் தாய் யானையின் இருப்பிடத்தை கண்டறிய வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். தொடர்ந்து 5-ம் நாளாக குட்டியை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, வனக்கால்நடை மருத்துவர் சுகுமார் கூறும்போது, “குட்டி யானையை மீட்டு தொடர்ந்து லேக்டோஜென் பால், குளுக்கோஸ், ராகி சாதம், புல், தர்பூசணி பழங்கள் ஆகியவற்றை வழங்கி வருகிறோம். குட்டி யானை, புல் வகைகளை விரும்பி சாப்பிடுகிறது. நாளொன்றுக்கு 8 தடவை லேக்டோஜென் பாலுடன் குளுக்கோஸ் புகட்டப்பட்டு வருகிறது.
குட்டி யானை முன்பு இருந்ததை விட ஆரோக்கியமாக உள்ளது. வனத்துறை சார்பில் தனியே குழுக்கள் அமைத்து தாய் யானையை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த குட்டி யானையை யானைகள் முகாமுக்கு அனுப்பி பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்று அவர் கூறினார்.