சுற்றுச்சூழல்

செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கும் கழிவுநீர் - அரசு பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

செய்திப்பிரிவு

செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி விளங்குகிறது. இந்த ஏரியில், இதன் அருகில் உள்ள இருங்காட்டுக் கோட்டை சிப்காட் தொழிற் பூங்கா, மருத்துவமனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் விடப்பட்டு வருகிறது.

அதிலும் ஏரியின் நீர்வரத்து கால்வாய்களான கிருஷ்ணா கால்வாய், பங்காரு கால்வாய், சவுத்திரி கால்வாய் வழியாக அதிக அளவில் கழிவுநீர் ஏரியில் கலப்பதாகவும், இதை தடுக்காமல் நீர்வளத் துறை அலட்சியமாக இருப்பதாகவும் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது. இதனடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா, தொழில் நுட்ப உறுப்பினர் சத்ய கோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, செம்பரம் பாக்கம் ஏரியில் கழிவு நீர் கலப்பது தொடர்பாக தமிழக அரசும், இருங்காட்டுக் கோட்டை சிப்காட் தொழிற் பூங்கா நிர்வாகமும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT