வீட்டின் முன் படுத்து கிடந்த வளர்ப்பு நாயை தூக்கிச் செல்லும் சிறுத்தைப் புலி. (கண்காணிப்பு கேமரா பதிவு) 
சுற்றுச்சூழல்

வீட்டின் முன்பு நாயைக் கொன்று தூக்கிச் சென்ற சிறுத்தைப் புலி - மூணாறு தொழிலாளர்கள் அச்சம்

என்.கணேஷ்ராஜ்

மூணாறு: மூணாறு அருகே குடியிருப்புக்குள் வந்த சிறுத்தைப் புலி வீட்டு முன்பு படுத்திருந்த வளர்ப்பு நாயை கவ்வி தூக்கிச் சென்றது. இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்புப் பணியை மும்முரப்படுத்தி உள்ளனர்.

தேனி மாவட்டத்தின் அருகில் கேரளாவின் இடுக்கி மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள மூணாறு உலக பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் நிலவியல் அமைப்பும், காலச்சூழலும் இங்கு அதிகம் உள்ளது. இருப்பினும் வனப்பகுதி சூழ்ந்திருப்பதால் விலங்குகள் நடமாட்டமும் அதிகம் இருக்கிறது. யானை, காட்டெருமை, சிறுத்தைப் புலி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி வந்து விடுகின்றன.

இந்நிலையில், தேவிகுளம் எஸ்டேட் மிடில் டிவிஷனில் இன்று அதிகாலை (மே 23) குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தைப் புலி புகுந்தது. பின்பு அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர் ரவி என்பவரின் வீட்டின் முன் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த வளர்ப்பு நாயின் கழுத்தை கவ்விக் கொண்டு வனப்பகுதிக்கு தூக்கிச் சென்றது.

ரவி காலையில் எழுந்து பார்த்தபோது நாய் இல்லாததால் சந்தேகத்தில் கண்காணிப்பு கேமரா பதிவை சோதனை செய்தார். அதில் சிறுத்தைப் புலி, நாயின் கழுத்தை கவ்வி தூக்கிக் கொண்டு ஓடியது தெரிய வந்தது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீட்டின் முன்பு வரை புலி வந்ததால் அப்பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் பயத்தில் உள்ளனர். தகவலறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்து கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி வருகின்றனர். தொடர்ந்து சிறுத்தைப் புலியை தேடும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூறுகையில், கடந்த டிசம்பர் மாதம் வளர்ப்பு நாயை இதேபோல் சிறுத்தைப் புலி தூக்கி சென்று கொன்றது. புலி நடமாட்டம் இருப்பதால் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. ஆகவே கூண்டு வைத்து இந்த புலியைப் பிடித்து அப்புறப்படுத்தவேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT