சுற்றுச்சூழல்

கோவையில் 4 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த பெண் யானை உயிரிழப்பு

ஆர். ஆதித்தன்

கோவை: மருதமலை அடிவாரத்தில் உடல்நலம் பாதித்த நிலையில் 4 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த பெண் யானை இன்று உயிரிழந்தது.

கோவை மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேற்குப் பகுதியில், கடந்த 17-ம் தேதி குட்டியுடன் இருந்த தாய் யானை மயங்கி கீழே விழுந்தது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் கும்கி யானை உதவியுடன் கிரேன் மூலம் பெல்ட்டால் இணைத்து யானையை தூக்கி நிறுத்தினர். வனக் கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், சதாசிவம், சுகுமார் ஆகியோர் மேற்பார்வையில் தாய் யானைக்கு கடந்த 4 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தாய் யானை அருகே பாசப்போராட்டம் நடத்திய குட்டி யானை, பின்னர் மற்றொரு யானை கூட்டத்துடன் வனத்துக்குள் சென்றுவிட்டது. இன்று காலை முதல் யானை பசும் தீவனம், பழங்கள், களி, தண்ணீர் வழங்கப்பட்டன. யானை சிறிதளவு பழங்களை மட்டும் உட்கொண்டது. மூட்டுவலி, கால்நோய் நிவாரணத்துக்காக யானைக்கு ஹெட்ரோதெரபி எனப்படும் நீர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தற்காலிகமாக தொட்டி அமைத்து அதில் தண்ணீரை நிரப்பி யானைக்கு நீர் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது.

இதுகுறித்து, கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறும்போது, “கால்நடை மருத்துவக் குழுவினரால் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், தாய் யானை அதன் நோய் தீவிரம் காரணமாக இறந்துவிட்டது. பிரேத பரிசோதனை முடிவுக்குப் பிறகு, உடல்நிலை குறித்த விரிவான தகவல்கள் தெரியவரும்” என்றார்.

SCROLL FOR NEXT