ஆவடி அருகே கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை பகுதியில் குவியும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பாயும் முக்கிய ஆறுகளில் ஒன்றான கூவம், ராணிப்பேட்டை மாவட்டம் கேசாவரம் கிராமத்தில் கல்லாற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டிலிருந்து உருவாகி, 72 கி.மீ. பயணித்து, சென்னையில் நேப்பியர் பாலம் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி வட்ட பகுதிகளின் விவசாய நிலங்களின் முக்கிய நீர் ஆதாரமாகவும், அப்பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இந்நிலையில், ஆவடி அருகே கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை பகுதியில் குவியும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததாவது: ஆவடி அருகே உள்ள தண்டுரை, அணைக்கட்டுசேரி, சோராஞ்சேரி, கண்ணபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கூவம் ஆற்று பாசனத்தை நம்பி நெல், கத்திரிக்காய், வாழை உள்ளிட்ட பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆவடி- காமராஜர் நகருக்கும், ஆவடி அருகே உள்ள கண்ணபாளையம் ஊராட்சி பகுதிக்கும் இடையே கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு கூவம் ஆற்றின் குறுக்கே தமிழக அரசால் தடுப்பணை அமைக்கப்பட்டது. இந்த தடுப்பணையில் ஆண்டுதோறும் பருவமழையின்போது கூவம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் தேக்கி வைக்கப்படுவதால் விவசாயிகள் பலனடைந்து வருவதோடு, ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் நகர், தண்டுரை, கண்ணபாளையம், அணைக்கட்டுசேரி, சோராஞ்சேரி, கண்ணபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது.
இச்சூழலில், ஆவடி-காமராஜர் நகருக்கும், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கண்ணபாளையம் ஊராட்சி பகுதிக்கும் இடையே கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள இந்த தடுப்பணையின் ஒருபுறமான கண்ணபாளையம் ஊராட்சி, அருணாச்சல நகர் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக குப்பை குவிந்து வருகிறது.
இதற்கு காரணம், கண்ணபாளையம் ஊராட்சியில் புதிதாக உருவாகியுள்ள குடியிருப்பு பகுதிகளான வி.ஜி.வி.நகர், அருணாச்சல நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்களில் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் சேரும் குப்பையை தடுப்பணை பகுதியில் கொட்டி வருவதுதான்.
ஆகவே, தடுப்பணையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. மேலும், தடுப்பணையை ஒட்டியுள்ள உயர் மட்ட பாலத்தை பயன்படுத்தும், ஆவடி மாநகராட்சி மற்றும் கண்ணபாளையம் ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.