கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில், பேருந்துகளில் ஆய்வு செய்து, விதிகளை மீறி பொருத்தப்பட்ட ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்த வட்டாரப் போக்குவரத்துத் துறையினர்.  படம்: ஜெ.மனோகரன் 
சுற்றுச்சூழல்

அலறும் ஏர்ஹாரன் - கோவை மாநகரில் பதறும் பொதுமக்கள்!

டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை மாநகரில் உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் ஆகிய இடங்களில் பிரதான நகரப் பேருந்து நிலையங்கள் உள்ளன. இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள், நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. பல தனியார் பேருந்துகள் விதிகளை மீறி இயங்கி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து பேருந்து பயணிகள் கூறியதாவது: மாநகரில் தனியார் நகரப் பேருந்து ஓட்டுநர்கள் தங்களுக்கு சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது போல், பேருந்துகளை இயக்கி வருகின்றனர். அதிவேகமாக பேருந்துகளை ஓட்டுவது, தடையை மீறி அதிக சப்தத்தை ஏற்படுத்தும் ‘ஏர் ஹாரன்’ பயன்படுத்துவது, நடத்துநர் அல்லாத நபர்கள், படிக்கட்டுகளில் நின்று கொண்டு பயணிகளை ஏற்றி, இறக்கும் செயல்களில் ஈடுபடுவது, ஓட்டுநர், நடத்துநர்கள் சீருடை அணியாமல் பயணிப்பது, பேருந்துகளில் பாடல்களை அதிக சப்தத்தில் இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் வைப்பது போன்ற விதிமீறல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியவட்டாரப் போக்குவரத்து துறையினர், பேருந்துகளின் விதிமீறல்கள் குறித்து புகார்கள் அளித்தாலும் அதை கண்டு கொள்வதில்லை. இதனால் தனியார் பேருந்துகளின் விதிமீறல் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, என்றனர். தனியார் பேருந்துகளின் விதிமீறல்கள் தொடர்பாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 16-ம் தேதி சிறப்புச் செய்தி வெளியானது. இச்செய்தியின் எதிரொலியாக கடந்த 17-ம் தேதி வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். விதிகளை மீறிய தனியார் பேருந்துகளின் மீது நடவடிக்கை எடுத்தனர்.

இதுதொடர்பாக கோவை வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் கூறும்போது, ‘‘பேருந்துகளில் பயன்படுத்தும் ஹாரன்கள் 96.5 டெசிபல் அளவை தாண்டி இருந்தால் அது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். கோவை காந்திபுரம் நகரப் பேருந்துநிலையத்தில், 70-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் சோதனை நடத்தப்பட்டது. ஹாரன் டெசிபல் அளவு, புகை வெளியேற்ற அளவு, போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுகின்றனரா என ஆய்வு செய்யப்பட்டது. அதில் தனியார் மற்றும் அரசு என 21 பேருந்துகளில் விதியை மீறி ஏர்ஹாரன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து மேற்கண்ட பேருந்துகளின் மீது அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப் பட்டது. விதிமீறலின் படி ஒவ்வொரு பேருந்துக்கும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இச்சோதனை தொடர்ச்சியாக நடத்தப்படும். விதிமீறல் பேருந்துகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

இதுகுறித்து கோவை நுகர்வோர் மையத்தின் தலைவர் வெங்கடேசன் கூறும்போது, ‘‘வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் விதிகளை மீறும் பேருந்துகள் மீது தொடர்ச்சியாக சோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் சோதனைப் பணிகள் செய்ய வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT