சென்னை பெருங்குடியில் உள்ள கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் பிரித்தெடுக்கும் மையத்தில் மணல், ஜல்லி ஆகியவை தனித்தனியாக பிரிக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) வி.ஜெயசந்திர பானு ரெட்டி, தெற்கு வட்டார துணை ஆணையர் எம்.பி.அமித் உள்ளிட்டோர். 
சுற்றுச்சூழல்

சென்னை மாநகராட்சி சார்பில் 3 மாதங்களில் ஒரு லட்சம் டன் கட்டுமான கழிவுகள் அகற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: கடந்த 3 மாதங்களில், பொது இடங்களில் கொட்டப்பட்டிருந்த ஒரு லட்சம் டன் கட்டுமானக் கழிவுகள் மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டுள்ளன. அதிலிருந்து மறுசுழற்சி முறையில் மணல், ஜல்லி உற்பத்தி செய்யப்படுகிறது.

நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் கொட்டப்படும் கட்டிடக் கழிவுகளால், சென்னை மாநகரம் பொலிவிழந்து காணப்படுகிறது. அதனால் மாநகராட்சி சார்பில் கட்டுமானக் கழிவு மேலாண்மை வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது வரும் ஏப்.21-ம் தேதி முதல் சென்னையில் அமலுக்கு வரவுள்ளது.

இந்நிலையில், கட்டிடக் கழிவுகளை பொது இடங்களிலிருந்து சேகரித்து, சேகரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்லுதல், அங்கிருந்து பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள கட்டுமானக் கழிவுகள் மேலாண்மை மையங்களுக்கு கொண்டு செல்லுதல் ஆகிய நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி கூடுதல் ஆணையர் ஜெயச்சந்திர பானு ரெட்டி நேற்று நேரில் விளக்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில் கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவுகளை கொட்ட, 15 மண்டலங்களிலும் தலா ஒரு சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை சேகரித்து மேலாண்மை செய்ய பிரீமியர் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மூலம் கடந்த ஜன.7 முதல் ஏப்.14-ம் தேதிவரை 1 லட்சம் டன் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

இந்தக் கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அப்பகுதிகளில் மறுசுழற்சிக்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் மணல், ஜல்லிக் கற்கள், உலோகம் ஆகியவை கிடைக்கின்றன.

அவற்றை கட்டிடம் அல்லாத கட்டுமான பணிகளுக்கு விற்கின்றனர். இந்த ஆலைகள் நாளொன்றுக்கு 3 ஆயிரம் டன் கையாளக்கூடியவை. தற்போது நாளொன்றுக்கு 1000 டன் கையாண்டு வருகின்றன. இதை கையாள மாநகராட்சி சார்பில் டன் ஒன்றுக்கு ரூ.640 வழங்கப்படுகிறது.

பொது இடங்களில் கட்டுமானக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தால் மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம். கடந்த 3 மாதங்களில் அந்த எண்ணில் 1,863 புகார்கள் வந்துள்ளன. `நம்ம சென்னை' செயலி மூலமாகவும் படத்துடன் புகார் தெரிவிக்கலாம்.

கட்டுமான கழிவுகளை அகற்றும் பணியில் 566 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 200 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளை சாலைகள், நீர்நிலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கொட்டுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். விதிகளை தொடர்ந்து மீறினால், காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளை கொட்டியோரிடமிருந்து ரூ.14.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT