சென்னை: வானிலை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய அதிக நவீன மயமாக்கல் செய்கிறோம். இதற்கான உபகரணங்கள் நிறுவ இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பி.அமுதா தெரிவித்தார்.
இந்திய வானிலை துறையின் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் சார்பில், உலக வானிலை தினம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, நடைபெற்ற கருத்தரங்கில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் அமுதா பேசியதாவது: உலக வானிலை அமைப்பு தொடங்கி 75 ஆண்டு நிறைவடைந்து, 76-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு மையக்கருத்து வைத்து கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, “முன்னெச்சரிக்கை இடைவெளியை ஒன்று சேர்ந்து குறைப்போம்” என்று மையக் கருத்து வைக்கப்பட்டுள்ளது. உலக வானிலை அமைப்பில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில், பாதி உறுப்பினர் நாடுகள் முன்னெச்சரிக்கை தகவல் கொடுப்பதில் வளர்ந்துள்ளனர். மீதி நாடுகள் வளரவில்லை எனில், மற்ற நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதாவது பொருள் இழப்பு, உயிரிழப்பு சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, எல்லா நாடுகளும் சமமாக தற்சார்பு நிலையை அடைபவர்களாக மாற்ற வேண்டும். வானிலை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய அதிக நவீன மயமாக்கல் செய்கிறோம். அதற்கான உபகரணங்கள் நிறுவ உள்ளோம். இந்தியா முழுவதும் 40 ரேடார்கள் உள்ளன. 2026-ம் ஆண்டுக்குள், கூடுதலாக 73 ரேடார்கள் நிறுவ ஆரம்ப கட்டப்பணிகள் நடைபெறுகின்றன.இதற்காக ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் எம்.சாய் குமார், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன், தென் மண்டல வானிலை ஆய்வு மைய முன்னாள் தலைவர் ஒய்.இ.ஏ. ராஜ், முன்னாள் இயக்குநர் ரமணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
உலக வானிலை தினத்தை ஒட்டி, வானிலை தொடர்பாக உபகரணங்கள், மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அதாவது வெப்பநிலை மானி, மழை மானி, தானியங்கி மழை மானி, தானியங்கி வானிலை அமைப்பு, மின்னணு உபகரணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
வானிலை சேவை தருவது தொடர்பாக காட்சி, புயலின் மேக அமைப்பு உள்பட பல்வேறு வானிலை தொடர்பாக காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.