கோவை: கோவையில் கடந்த 4 ஆண்டுகளில் 14,962 முறை யானைகள் வனத்தைவிட்டு வெளியேறி உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். வனப்பகுதியில் பல்லுயிர் சூழலில் முக்கியப் பங்காற்றி வரும் யானைகள் நாளொன்றுக்கு 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் பயணித்து 250 கிலோ உணவு, 150 லிட்டர் தண்ணீர் அருந்தி வாழும் தன்மை உடையவை.
கூட்டமாக வாழும் சமூக விலங்கு அமைப்பைக் கொண்ட யானைகள் தங்களது குட்டியுடன் உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறி விளை நிலங்களில் பயிரிடப்படும் வாழை, தென்னைகளை சாப்பிட்டு, தங்களது உணவுப் பழக்கத்தை மாற்றி கொண்டுள்ளன. இதனால் மனித-விலங்கு முரண்பாடு சமீப காலமாக அதிகரித்துள்ளது.
கோவை வனக்கோட்டத்தில் ஆசிய யானைகள் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு மேலாண்மை மையத்தின் மூலம் யானைகள் பாதுகாப்பு குறித்தும், மனித-விலங்கு முரண்பாடுகளை தடுத்தல் குறித்தும் ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, ஆசிய யானைகள் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு மேலாண்மை மையத்தின் உயிரியலாளர் நவீன் கூறியதாவது: தமிழகத்திலேயே அதிகபட்ச மனித-விலங்கு முரண்பாடுகள் நடக்கும் மாவட்டமாக கோவை உள்ளது. இதைத் தடுக்க தமிழக அரசு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது. மேலும் தடம் ‘வாட்ஸ்அப்’ குழுக்கள் மூலம் யானை நடமாட்டத்தை கண்காணித்து விவசாயிகள், பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 2021-2024-ம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் 14,962 முறை யானைகள் வனத்தைவிட்டு வெளியேறி உள்ளன. கடந்த 2021-ல் 2206 முறையும், 2022-ல் 3,369 முறையும், 2023-ல் 4,241 முறையும், 2024-ல் 5,146 முறையும் யானைகள் வனத்தைவிட்டு வெளியேறியுள்ளன. குட்டியுடன் உணவு தேடுவதற்காகவே பெண் யானைகள் அதிகளவில் வனத்தை விட்டு வெளியேறி உள்ளன.
கடந்த ஏப்ரல் 2021 முதல் அக்டோபர் 2024 வரையிலான காலக்கட்டங்களில் யானை தாக்கி 68 மனிதர்களும், 40 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் பயிர்சேதங்கள், மனித உயிரிழப்புகளுக்கென ரூ.8.44 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் 3,275 பயிர் சேதங்களுக்கு ரூ.4.69 கோடியும், 68 மனித உயிரிழப்புகளுக்கு ரூ.3.09 கோடியும், காயமடைந்த 166 பேருக்கு ரூ.43.21 லட்சமும் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த 2011 முதல் 2024 வரையிலான காலக்கட்டங்களில் 185 பேர் யானை தாக்கி உயிரிழந்தனர். அதே காலக்கட்டத்தில் 210 யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த ஓராண்டில் 1,142 முறை ரயில் தண்டவாளத்தை ஒட்டி வந்த யானைகள் பாதுகாப்பாக கடந்து சென்றுள்ளன. தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 820 ஆண் யானைகள், 1,014 பெண் யானைகள், 472 குட்டி யானைகள் என மொத்தம் 2,306 யானைகள் வனத்துக்குள் விரட்டப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.