40 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் மக்கள் தண்ணீருக்காகப் படும் துயரங்களைக் கண்டு வருந்தினார் ராஜேந்திர சிங். தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அந்தக் கிராமத்தில் உள்ள குளத்தை தனியாகத் தூர்வாரினார்.
அதைக் கண்டு மக்கள் அவரை ஏளனம் செய்தனர். எதையும் பொருள்படுத்தாமல் குளத்தின் பரப்பளவை அதிகப்படுத்தினார். அந்த ஆண்டு மழை பெய்தபோது அந்தக் குளம் நிறைந்து, கிராமத்தின் தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்கியது.
அப்படி ஆரம்பித்த ராஜேந்திர சிங்கின் தண்ணீருக்கான பயணம், ராஜஸ்தானில் உள்ள 7 நதிகளைப் பின்னர் மீட்டெடுக்க வைத்தது. பிறகு மழைநீர் சேமிப்புக்காக நாடு முழுவதும் 850 கிராமங்களில் 4,500 தடுப்பணைகளையும் குளங்களையும் அவர் உருவாக்கினார்.
இதன் மூலம் 1,200 கிராமங்களில் வசித்த மக்களின் தண்ணீர்ப் பிரச்சினைத் தீர்ந்தது. இவற்றைக் கண்ட பல மாநிலங்கள் தங்களின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இவரிடம் உதவி கேட்டன. இவரின் வழிகாட்டு தலில் அங்கும் தண்ணீர்ப் பிரச்சினை காணாமல் போனது. இதனால் ராஜேந்திர சிங்கை மக்கள் அன்போடு ‘தண்ணீர் மனிதர்’ என்று அழைக்க ஆரம்பித்தனர்.
ராஜேந்திர சிங்கின் சிறந்த சேவையைப் பாராட்டி, ஆசியாவின் நோபல் என்று அழைக்கப்படும் ‘ரமோன் மகசேசே’ விருது 2001ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு ஜம்னா லால் பஜாஜ் விருது அளிக்கப்பட்டது.
2015ஆம் ஆண்டு ’நீர் மேலாண்மைக்கான நோபல் பரிசு’ என்று அழைக்கப்படும் ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் பிரைஸ்’ என்கிற விருதை வழங்கி, ராஜேந்திர சிங்கை ஸ்வீடன் அரசு கெளரவித்தது. இன்றும் தண்ணீர்ப் பிரச்சினை, தண்ணீர் மாசு தொடர்பாகச் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார் இந்த 65 வயது ‘தண்ணீர் மனிதர்.’
| மார்ச் 22 - உலக நீர் நாள் |