உலக அளவில் 220 கோடிப் பேருக்கு இன்னும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. இதில் வீட்டுக்குத் தேவையான தண்ணீரைச் சேகரிக்கும் பொறுப்பு பெரும்பாலும் பெண்களிடமே இருக்கிறது. சிறுவர்களைவிடச் சிறுமியரே இரண்டு மடங்கு அதிகமாக வீடுகளுக்குத் தேவையான தண்ணீரைக் கொண்டுவரும் பணியில் ஈடுபடுவதாக ஐ. நா. அவை தெரிவித்துள்ளது.
அந்த வகையில், 21ஆம் நூற்றாண்டிலும் தண்ணீர் நெருக்கடி என்பது பெண்களுக்கான நெருக்கடியாகவே உள்ளது. தண்ணீர்ப் பற்றாக்குறை பெண்களின் அன்றாட வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் சமூக வாழ்வையும் பாதிக்கிறது. அதுவும் குறிப்பாக இந்தியக் கிராமங்களில் தண்ணீரைத் தேடியே தங்களின் பெரும்பான்மையான நேரத்தைப் பெண்கள் செலவிடுகிறார்கள். இதனால் மனதளவிலும் உடலளவிலும் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள்.
பெண்களும் சிறுமியரும் தண்ணீருக்காக நீண்ட பயணம் மேற்கொள்வதால் கல்வி, வேலை, ஓய்வு நேரத்தை இழக்க நேரிடுகிறது. மேலும் நீண்ட தூரம் பயணித்துத் தண்ணீரைச் சேகரிக்கும்போது ஆபத்துகளையும் எதிர்கொள்கின்றனர். இவர்கள் தண்ணீ ரைச் சேகரிக்க எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் அவர்களை கல்வி, விளையாட்டு, பாதுகாப்பு போன்றவற்றிலிருந்து விலகலை ஏற்படுத்துவதாக யூனிசெஃப் தெரிவித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை கோடைக் காலத்தில் ஒவ்வொரு நாளும் தண்ணீருக்காக 4 முதல் 5 மணி நேரத்தைப் பெண்கள் செலவிடுகி றார்கள். இதன் காரணமாகக் கழுத்து வலி, மூட்டு வலி, உடல் பலவீனத்தால் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் ராமநாதபுரம், அரியலூர் போன்ற மாவட்டங்களில், கிராமப்புறப் பெண்கள் நூறு நாள் வேலையையே நம்பி இருக்கிறார்கள். தண்ணீர்ப் பிரச்சினை வந்துவிட்டால், பெண்களால் அந்த வேலைக்குச் செல்ல முடியாத சூழலே தற்போது நிலவுகிறது. இதனால் பொருளாதாரத் தேவைகளுக் காகப் பெண்கள் குடும்பத்தினரைச் சார்ந்திருக்கும் சூழல் நிலவுகிறது.
தண்ணீர்ப் பற்றாகுறை என்பது பெண்களை மனதளவிலும், உடலளவிலும், பொருளாதார அளவிலும் ஒடுக்குகிறது. வறட்சிக் காலங்களில் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய ஆக்கபூர்வமான, நீடித்திருக்கும் நிலையான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டும். - அஸ்பாசியா
| மார்ச் 22 - உலக நீர் நாள் |