சுற்றுச்சூழல்

கொசஸ்தலையாற்றில் எண்ணெய் கசிவு விவகாரம்: சிபிசிஎல் நிறுவனத்திடம் ரூ.73 கோடி அபராதம் வசூலிக்க இடைக்காலத் தடை

ச.கார்த்திகேயன்

சென்னை: கொசஸ்தலையாற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட விவகாரத்தில் சிபிசிஎல் நிறுவத்துக்கு மாசுக்கட்டுப்பாடு வாரியம் விதித்த அபராதத்தை வசூலிக்க இடைக்காலத்தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

சென்னையில் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிகனமழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டது. அப்போது, மணலி பகுதியில் இருந்து சிபிசிஎல் நிறுவனம் அருகில், பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக திடீரென எண்ணெய் படலம் பரவியது. இது கொசஸ்தலையாறு, எண்ணூர் கழிமுகம் வழியாக கடலில் கலந்தது. சுமார் 20 கிமீ தூரத்துக்கு எண்ணெய் படலம் பரவியது. இதன் காரணமாக அப்பகுதிகளில் மீன்கள் செத்து மிதந்தன. அப்பகுதிகளுக்கு இரைதேடி பறவைகள் வரவில்லை. மீனவர்களின் வீடு மற்றும் உடைமைகள் சேதமடைந்து, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியானதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் எண்ணெய் கசிவு ஏற்படுத்தியதாக சிபிசிஎல் நிறுவனத்துக்கு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ரூ.73 கோடி அபராதம் விதித்திருந்தது. இதை எதிர்த்து சிபிசிஎல் நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் இன்று (மார்ச் 19) விசாரணைக்கு வந்தது.

அப்போது, எண்ணெய் கசிவு குறித்து ஐஐடி இன்னும் அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில் அபரதாம் செலுத்த உத்தரவிட்டது நியாயமற்றது என சிபிசிஎல் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, சிபிசிஎல் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை மாசுக்கட்டுப்பாடு வாரியம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்திய வகையில் விதிக்கப்பட்ட அபராதத்தில் 50 சதவீத தொகையான ரூ.19 கோடியை வங்கி உத்திரவாதத்துடன் 4 வாரங்களில் செலுத்த சிபிசிஎல் நிறுவனத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. தொடர்ந்து, சிபிசிஎல் மனுவுக்கு பதிலளிக்கும்படி மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு உத்தரவிட்ட தீர்ப்பாயம், வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்.30-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

SCROLL FOR NEXT