புளியங்குடி அந்தோணிசாமி | கோப்புப் படம் 
சுற்றுச்சூழல்

புளியங்குடி அந்தோணிசாமிக்கு ‘வேளாண் வேந்தர்’ விருது வழங்கி சட்டப் பல்கலை. கவுரவிப்பு

சி.பிரதாப்

சென்னை: முன்னோடி இயற்கை விவசாயி புளியங்குடி அந்தோணிசாமிக்கு வேளாண் வேந்தர் விருதை தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வழங்கி கவுரவித்துள்ளது.

இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சாணம் மற்றும் கோமியம் போன்ற கால்நடை கழிவுப் பொருள்களையே இடுபொருள்களாக வைத்து நம் தாய் மண்ணின் வளத்தையும் செழுமையையும் மீட்டெடுக்கும் பணியில் தம்மை முழுமையாக அர்பணித்தவர் புளியங்குடி அந்தோணிசாமி.

இவர் விவசாயத்தில் பல்வேறு இயற்கையான முறைகளைப் புகுத்தி அதில் 20 சதவீதத்துக்கும் மேலாக மகசூலை பெருக்கிக் காட்டியவர். மருதாம்பு கரும்பு செய்வது மட்டுமின்றி அதிலிருந்து வரும் இலை தழைகளை மண்ணுரமாக மாற்றி இயற்கை விவசாயத்தில் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வையகமே வியந்து பார்க்கும் வகையில் விளைச்சல் கொடுத்தவர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ளடங்கிய புளியங்குடி என்ற ஒரு சிறிய கிராமத்தை ‘ஆசியாவின் எலுமிச்சை நகரம்’ என்று உருவகப்படுத்தியதில் பெரும்பங்களிப்பை வழங்கியவர். இவரது சேவையைப் பாராட்டு இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கு இவருக்கு பல்வேறு விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளன.

இத்தகைய சிறப்பு மிக்க முன்னோடி இயற்கை விவசாயி புளியங்குடி அந்தோணிசாமிக்கு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ‘வேளாண் வேந்தர்’ என்ற விருதை வழங்கியுள்ளது. இந்த விருதை சென்னை பெருங்குடியில் உள்ள பல்கலை. வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி நக்கீரன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்தோஷ் குமார், பதிவாளர் கவுரி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT