சென்னை: வன விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ஆனைமலை புலிகள் சரணாலயம் பகுதியில் புதிதாக சாலை அமைக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், திருப்பூரைச் சேர்ந்த கவுதம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் சரணாலயம் பகுதியில் திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு செல்ல ஏதுவாக ரூ. 49 லட்சம் செலவில் புதிதாக சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும். இப்பகுதியில் ஏற்கெனவே கான்கிரீட் சாலை உள்ள நிலையில் புதிதாக சாலை அமைத்தால் வன விலங்குகள் வேட்டையாடப்படும்.
மேலும், வனப்பகுதியில் உள்ள அரிய வகை மரங்கள் வெட்டி கடத்தப்படவும் வாய்ப்புள்ளது. சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அது வனவிலங்குகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும். நீர்வழித்தடங்களில் மாற்றம் ஏற்பட்டு சுற்றுச்சூழலுடன், வன விலங்குகளும் கடுமையாக பாதிக்கும். எனவே அப்பகுதியில் புதிதாக சாலை அமைக்க தடை விதிக்க வேண்டும்,” என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர். ஶ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புதிதாக சாலை அமைத்தால் அது வனவிலங்குகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என வனத்துறை தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தகுந்த விளக்கமளிக்க அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
அப்போது அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் ஏற்கெனவே தொடங்கி விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனப்பகுதியில் புதிதாக சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும் என அரசு தரப்பிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை மார்ச் 27-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.