புதுடெல்லி: குஜராத் மாநிலம் ஜாம்நகரில், ரிலையன்ஸ் குழுமத்தின் வன உயிரின பாதுகாப்பு, மீட்பு, மறுவாழ்வு நிலையமான ‘வன்தாரா’வை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து வியந்து பாராட்டினார்.
ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியின் முயற்சியில், 3,000 ஏக்கர் பரப்பளவில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட யானைகள் மற்றும் வனவிலங்குகளின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மீட்பு மையமான இங்கு, விலங்குகளுக்கு சரணாலயம், மறுவாழ்வு மற்றும் மருத்துவ பராமரிப்பு ஆகியவை வழங்கப்படுகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘வன்தாரா’வை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி அப்போது விலங்குகளுடன் எடுத்துக்கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அவர், "சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, வன உயிரின நலனை ஊக்குவிக்கும் அதே வேளையில், விலங்குகளுக்குப் பாதுகாப்பான புகலிடத்தை வழங்கும் தனித்துவமான வன உயிரின பாதுகாப்பு, மீட்பு, மறுவாழ்வு முயற்சியான ‘வன்தாரா’வை தொடங்கி வைத்தேன். இந்த கருணைமிக்க முயற்சிக்காக அனந்த் அம்பானி மற்றும் அவரது ஒட்டுமொத்த குழுவையும் நான் பாராட்டுகிறேன்.
‘வன்தாரா’ போன்ற ஒரு முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. நமது புவியை நம்மோடு பகிர்ந்து கொள்பவர்களைப் பாதுகாப்பதற்கான நமது பல நூற்றாண்டுகள் பழமையான நெறிமுறைகளுக்கு ஒரு துடிப்பான எடுத்துக்காட்டாக ‘வன்தாரா’ திகழ்கிறது.
‘வன்தாரா’வில் ஆசிட் வீச்சுக்கு ஆளான ஒரு யானையை நான் பார்த்தேன். அந்த யானை மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பார்வை இழந்த யானைகளும் அங்கு இருந்தன. பாகன்கள்தான் அதற்குக் காரணம் என்று அறிந்தபோது முரண்பாடாக இருந்தது.
மற்றொரு யானை வேகமாக வந்த லாரியில் மோதியது. இது ஒரு முக்கியமான கேள்வியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது - மக்கள் எப்படி இவ்வளவு கவனக்குறைவாகவும் கொடூரமாகவும் இருக்க முடியும்? இத்தகைய பொறுப்பற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, விலங்குகள் மீது கருணை காட்டுவதில் கவனம் செலுத்துவோம்.
ஒரு பெண் சிங்கம் வாகனத்தில் மோதியதில் முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டது. அதற்கு சரியான பராமரிப்பு அளிக்கப்பட்டது. தனது குடும்பத்தினரால் கைவிடப்பட்ட ஒரு சிறுத்தை குட்டிக்கு சரியான ஊட்டச்சத்து பராமரிப்பு மூலம் புதிய வாழ்க்கை கிடைத்தது. இதுபோன்ற பல விலங்குகளுக்கு வழங்கப்பட்ட பராமரிப்புக்காக ‘வன்தாரா’ குழுவை நான் பாராட்டுகிறேன்" என தெரிவித்துள்ளார். | பார்க்க > ‘வன்தாரா’ வனப்பகுதியில் வலம் வந்த பிரதமர் மோடி - புகைப்படத் தொகுப்பு