ஆவடியில் ரூ.28 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட பருத்திப்பட்டு பசுமைப் பூங்கா, போதிய பராமரிப்பின்றி பாழாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள பருத்திப்பட்டு பகுதியில் 87 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது.
இந்த ஏரி ஆவடி பகுதியின் முக்கிய நீராதாரமாக இருந்து வந்தது. நாளடைவில் இந்த ஏரியின் ஒரு பகுதி வீட்டுவசதி வாரிய குடியிருப்பாக மாற்றப்பட்டது. எஞ்சியுள்ள ஏரியின் ஒரு பகுதியில், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட வீடு, உணவகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இங்கு வந்து கலக்கிறது.
இதையடுத்து, ஏரியின் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் வகையில் ரூ.28.16 கோடி மதிப்பில் பருத்திப்பட்டு ஏரி பசுமைப் பூங்கா உருவாக்கப்பட்டு 2019-ல் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. இப்பூங்காவில் ஏரியைச் சுற்றிலும் 3 கி.மீ. நீளத்துக்கு நடைபாதை, திறந்தவெளி அரங்கம், விளையாட்டு உபகரணங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், உணவக கட்டிடம், படகு குழாம், நூலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இந்நிலையில், இப்பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது: பருத்திப்பட்டு பசுமைப் பூங்கா ஆவடி மட்டுமின்றி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் மிகச் சிறந்த பொழுதுபோக்கு மையமாக திகழ்கிறது.ஆனால், இந்த பூங்காவில் பராமரிப்பு பணி மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக, முன்பு தனியார் நிறுவனம் மூலம், 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
தற்போது பணியில் 2 ஊழியர்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பூங்காவின் முகப்பு பகுதியில் மட்டும் தூய்மை பணியை செய்கின்றனர். நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதையில் அவர்கள் சுத்தப்படுத்துவது கிடையாது. இதனால், பாதை முழுவதும் குப்பை கூளமாக காட்சி அளிக்கிறது.
அத்துடன், பூங்காவின் ஒரு புறம் சுவர் கட்டப்பட்டுள்ளது. மற்றொரு புறம் இரும்புக் கம்பிகளால் ஆன தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்புகள் வழியாக நாய்கள் பூங்காவுக்குள் வந்து நடைபாதையில் அசுத்தம் செய்கின்றன. இதனால், நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும், ஏரிக்குள் வரும் கழிவு நீரை சுத்திகரிப்பதற்காக கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் உள்ளது.
ஆனால், அவை முறையாக செயல்படாததால் மழைநீர் வடிகால்வாய் வழியாக கழிவுநீர் சேர்ந்து நேரடியாக ஏரியில் வந்து கலந்து விடுகிறது. அதேபோல், பாதுகாப்பு பணியில் முன்பு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த 8-க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் இருந்தனர்.
அவர்களுக்கு போதிய ஊதியம் வழங்காததால் தற்போது 2 பேர் மட்டுமே பாதுகாப்பு பணியில் உள்ளனர். இதனால், பூங்காவுக்கு வரும் இளம் ஜோடிகளின் அத்துமீறல்கள் குடும்பத்தினருடன் வருபவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. மேலும், பூங்காவில் பாதுகாப்பு பணியை மேற்கொள்வதற்காக போலீஸார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் வாரத்துக்கு ஓரிரு நாட்கள் மட்டுமே வருகின்றனர்.
அவ்வாறு வந்தாலும் பூங்கா முழுவதும் சென்று பாதுகாப்பு பணியை மேற்கொள்வது கிடையாது. முகப்பு பகுதியில் ஒருசில மணி நேரம் அமர்ந்து ஓய்வெடுத்து விட்டு சென்று விடுகின்றனர். பூங்காவின் ஒரு பகுதியில் உள்ள கோயிலின் அருகில் நுழைவு வாயில் உள்ளது.
அங்கு மாலை நேரத்தில் இளைஞர்கள் சிலர் அமர்ந்து கொண்டு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதனால், அவ்வழியாக பூங்காவுக்கு வரும் பெண்கள் அச்சப்படுகின்றனர். பூங்காவின் ஒரு பகுதியில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. ஆனால், தண்ணீர் வசதி செய்யப்படாததால் அதைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், பூங்காவின் சில இடங்களில் புதர்கள் மண்டி உள்ளது. இதனால், அங்கு பாம்புகள் நடமாட்டம் உள்ளதால், நடைபயிற்சிக்கு வருவோர் அச்சம் அடைகின்றனர். எனவே, அப்பகுதிகளை சுத்தப்படுத்தி அழகிய பூங்கா அமைக்க வேண்டும்.
அதேபோல், பூங்காவில் உணவகம் அமைப்பதற்கான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், கட்டிடம் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. எனவே, அந்த கட்டிடத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் குறைந்த விலையிலான உணவகம், ஆவின் பாலகம் ஆகியவற்றை திறக்க வேண்டும்.
இது பூங்காவுக்கு வரும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இரவு 7.30 மணிக்கே பூங்காவுக்கு வரும் அனைவரையும் வெளியேற்றி பூட்டிவிடுகின்றனர். பொதுமக்கள் அமருவதற்கு கூடுதல் இருக்கைகள் அமைக்க வேண்டும். மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, ஆவடி மாநகராட்சி ஆணையர் எஸ்.கந்தசாமியிடம் கேட்டபோது, “பருத்திப்பட்டு பசுமைப் பூங்காவில் தூய்மைப் பணி மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள கூடுதல் ஊழியர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், நாய்கள் வருவதை தடுக்கவும், உணவகம் திறக்கவும் நடவடிக்கை எடுப்பதோடு, பூங்கா கூடுதல் நேரம் திறக்கப்படுவது குறித்தும் பரிசீலனை செய்யப்படும்” என்றார்.