பந்தலூர்: தமிழ்நாட்டில் ஒரு மாவட்டம் முழுமையாக வனப்பகுதியில் இருக்கிறது என்றால், அது நீலகிரி மட்டுமே. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அற்புதமான பகுதியான நீலகிரி மாவட்டம், தேயிலை காடுகள் அதிகம் நிறைந்த குளுகுளு பகுதியாகவும், இயற்கையாகவே அமைந்த சுற்றுலா தலங்களை உள்ளடக்கியதாகவும் விளங்குகிறது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநில எல்லைகளில் வனப்பகுதியில் நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளதால் யானை, சிறுத்தை, புலி உட்பட பல்வேறு விலங்குகள் இருக்கின்றன. நீலகிரி மாவட்டத்தின் இயற்கை வளத்தை பாதுகாக்க, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு வளரக்கூடிய ஈட்டி, தேக்கு, அயனி வகை பலா மற்றும் பலா ஆகிய மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இருப்பினும், மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரிய வகை மரங்களை வெட்டிக் கடத்துவது தொடர் கதையாகி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக வனம் மற்றும் வருவாய் துறையினரின் ஒத்துழைப்போடு, பந்தலூர் பகுதியிலுள்ள மரங்கள் வெட்டப்பட்டு இரவோடு, இரவாக கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. தற்போது, பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில் பல ஏக்கரில் 2,000 மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.
இந்த நிலம் விவசாய நிலம் என்றும், மரங்கள் வெட்ட அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அனுமதி பெறப்பட்டு வெட்டப்பட்ட மரங்களை, எதற்காக லாரிகளில் மூடி கொண்டு செல்கின்றனர் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, "பட்டா நிலங்களிலுள்ள மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கமிட்டியிடம் அனுமதி பெற வேண்டும். இத்தகைய சூழலில் 2,000 மரங்களை வெட்ட அனுமதி அளித்தது வியப்பளிக்கிறது. கூடலூர் வனக்கோட்டத்தில் வனப்பரப்பு குறைந்து, யானைகள் மற்றும் விலங்குகள் நகரப் பகுதிக்கு படையெடுத்து வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், மரங்கள் மட்டுமின்றி மூங்கில்களும் வெட்டப்படுகின்றன.
இதுகுறித்து காவல் மற்றும் வனத்துறைக்கு புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தேக்கு, சந்தனம் உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் மற்றும் குன்னிவாகை, சடச்சி ஆகிய அரிய வகை மரங்களை வெட்டி சாய்த்து, அப்பகுதியின் இயற்கையை சீரழித்து வருகின்றனர்" என்றனர்.
மாற்றுப் பாதை: இந்நிலையில், ஓவேலியில் காவல் மற்றும் வனத்துறை அமைத்துள்ள சோதனைச்சாவடி வழியாக வராமல், சட்டவிரோதமாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.இந்த சாலை, கூடலூர் பகுதியில் விதிமுறைகளை மீறி பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த சாலை மக்களுக்கு பயன்படாது என்ற நிலையில், ஓவேலி சோதனைச்சாவடி வழியாக வாகனங்கள் வருவதை தவிர்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலமாக, மரங்கள் கடத்தல் மற்றும் சட்டவிரோத செயலுக்காக, சோதனைச்சாவடி வழியாக வாகனங்கள் வராமல் செல்ல இந்த சாலை அமைக்கப்பட்டதா, முக்கிய நபர்கள் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.