உதகை: வனவிலங்கு வேட்டையை தடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் வேட்டை தடுப்பு இரவு சிறப்பு ரோந்து பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு, கேரளா கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் மாவட்டமாக நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் முதுமலை புலிகள் காப்பகம், கர்நாடகாவில் பந்திப்பூர் புலிகள் காப்பகம், கேரளா முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் என மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் மாவட்டமாக நீலகிரி மாவட்டம் அமைந்துள்ள நிலையில், சமீப காலமாக தமிழ்நாடு எல்லையில் வனவிலங்குகள் வேட்டை அதிகரித்து வருகிறது.
உதகை அருகே கேத்தி, ஓவேலி ஆகிய பகுதிகளில் காட்டு மாடுகள் இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டது தெரிய வந்தது. மேலும், மரக்கடத்தல் புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு எல்லை பகுதியான கூடலூர் அடுத்துள்ள தேவர் சோலைப் பகுதியில் கடந்த 25ம் தேதி இரவு நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற ஜம்ஷிர்(37) உயிரிழந்தார்.
நண்பர்களுடன் ஜம்ஷிர் வேட்டையாடச் சென்றதும், அப்போது மானை சுட்டபோது எதிர்பாராத விதமாக ஜம்ஷிர் மீது குண்டுகள் பாய்ந்தது விசாரணையில் தெரிய வந்தது. இச்சம்பவத்தில், 14 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் வேட்டை அதிகரிப்பது சூழலியலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வன விலங்குகள் வேட்டையை தடுக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறத்தினர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் வேட்டை முழுமையாக தடுக்கும் வகையில் சிறப்பு ரோந்து பணியை வனத்துறையினர் மேற்கொண்டனர். நீலகிரி மாவட்ட வன அலுவலர் கௌதம் தலைமையிலும், சரகர் சசிகுமார் மேற்பார்வையில் மூன்று மாநில எல்லையான பைக்காரா சந்திப்பில் வன ஊழியர்கள் முதல் முறையாக வன குற்றங்களைத் தடுக்க சிறப்பு ரோந்து பணியை மேற்கொண்டனர்.
வனத்துறையினர் கூறும் போது, ‘வனத்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் வனவிலங்கு வேட்டையை தடுக்க தமிழ்நாட்டில் முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் வேட்டை தடுப்பு இரவு சிறப்பு ரோந்து பணியை வனத்துறை தொடங்கியுள்ளது. தனித்தனியாக 10 குழுக்கள் வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குழுக்கள் தனியார் வாகனங்கள் மட்டுமல்லாமல் அரசு பேருந்துகளையும் தணிக்கை செய்கின்றனர்’ என்றனர்.