கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் குறைந்து வரும் மூலிகை புல்வெளிகளை பாதுகாக்க அந்நிய மரங்களை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் 2,000 ஏக்கர் பரப்பளவில் அருகம்புல், எலுமிச்சை புல் போன்ற மூலிகை புல்வெளிகள் உள்ளன. கடந்த 2016-ம் ஆண்டில் வருவாய்த் துறை வசம் இருந்த மன்னவனூர் நிலம், வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சூழல் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டது.
சுற்றுலா பயணிகளை கவர இப்பகுதியில் உள்ள எழும்பள்ளம் ஏரியில் பரிசல் சவாரி, குதிரை சவாரி, ஜிப் லைன் சாகசம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள பசுமையான புல்வெளிகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்கின்றன. பரந்த புல்வெளிகள் குழந்தைகள் விளையாட ஏற்றதாக உள்ளன. மேலும் ‘டிரக்கிங்’ செல்ல பாதை, மரப்பாலம் போன்றவை அமைந்திருப்பதால் சுற்றுலா்ப் பயணிகள் இங்கு செல்ல அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைப் பட்டு போர்த்தியது போல் பசுமையாக இருக்கும் புல்வெளி நிறைந்த பகுதியில் தற்போது யூகலிப்டஸ், சவுக்கு மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.
கொஞ்சம் கொஞ்சமாக அந்நிய மரங்கள் புல்வெளிகளை ஆக்கிரமித்து வருவதால் விரைவில் மூலிகை புல்வெளிகள் அழியும் அபாயம் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க, கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு அழகு சேர்க்கும் மூலிகை புல்வெளிகளை பாதுகாக்க அந்நிய மரங்களை உடனே வெட்டி அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மேல்மலை விவசாயிகள் கூறியதாவது: மன்னவனூர், பூண்டி, கிளாவரை, கவுஞ்சி ஆகிய மேல்மலை கிராமங்களில் இயற்கை கொடுத்த கொடையாக வளரும் மூலிகை புல்வெளிகள் விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு உணவாக பயன்படுகின்றன. ஆனால், சில ஆண்டுகளாக புல்வெளி நிலங்களில் அந்நிய மரங்கள் அளவுக்கு அதிகமாக வளர்ந்து வருகின்றன. இதனால், மேய்ச்சல் நிலம் குறைந்து, கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இதனால் சில விவசாயிகள் கால்நடைகளை விற்பனை செய்து விட்டனர். மேல்மலை மட்டுமின்றி கொடைக்கானல் முழுவதும் அந்நிய மரங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனை வனத்துறையினர் தடுக்க வேண்டும், என்று கூறினர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், கொடைக்கானல் வனப்பகுதியில் இருக்கும் அந்நிய மரங்களை வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது. அந்த பகுதிகளில் சோலை மரங்கள் நடவு செய்யப்பட்டு வருகின்றன, என்றனர்.