சீர்காழி அருகே மடவாமேடு கிராமத்தில் 2 கி.மீ. தொலைவுக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள கடலோரப் பகுதியான மடவாமேடு மீனவக் கிராமத்தில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் அண்மைக்காலமாக கடல் சீற்றம் ஏற்பட்டு, மெல்ல மெல்ல கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதாகவும், கடந்த 2 மாதங்களாக கடல் அரிப்பு அதிகரித்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது கடற்கரையில் 2 கி.மீ. தொலைவுக்கு 100 மீட்டர் வரை அரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் கரைப் பகுதியில் வளர்க்கப்பட்டுள்ள சவுக்கு காடுகளில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்து வருவதாகவும் அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
கடல் அரிப்பு தொடர்ந்து அதிகரித்தால், ஊருக்குள் கடல்நீர் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, கடற்கரையோரத்தில் மண் அரிப்பைத் தடுக்கும் வகையிலும், ஊருக்குள் கடல்நீர் உட்புகாமல் பாதுகாக்கும் வகையிலும் கருங்கல் தடுப்புச் சுவர் அமைக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவக் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.