மேட்டுப்பாளையம் கனரக ஊர்தி முனையத்தில் குப்பை கொட்டப்பட்டு வந்த இடம், சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. 
சுற்றுச்சூழல்

முன்பு குப்பை மேடு... இப்போது மியாவாக்கி காடு! - இது புதுச்சேரி அசத்தல்

அ.முன்னடியான்

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் கனரக வாகன முனையம் (டிரக் டெர்மினல்) உள்ளது. இங்கு உழவர்கரை நகராட்சிக்கு சொந்தமான இடத்தில், தொழிற்சாலைகளின் குப்பைக் கழிவுகள் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக கொட்டப்பட்டு வந்தது. தொழிற்பேட்டை பகுதியில் இந்த இடம் இருப்பதால், இங்கு குப்பைக் கழிவுகள் சேருவது தவிர்க்க முடியாதது என்று சொல்லப்பட்டு வந்தது.

இதற்கிடையே, உழவர்கரை நகராட்சி நிர்வாகம் ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பீச் டவுன் அமைப்புடன் இணைந்து, அங்கு சுற்றுச்சூழல் பூங்கா ஒன்றை அமைத்து, நல்ல ஒரு சூழியல் செயல்பாட்டுக்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. சுமார் 30 ஆயிரம் சதுரடி கொண்ட இந்த இடத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளை அகற்றி, மியாவாக்கி காடு மற்றும் சுற்றுச்சூழல் பூங்காவை அமைத்துள்ளனர். மேலும், இந்த சுற்றுச்சூழல் பூங்கா உள்ளே மழைநீர் சேகரிப்பு நிலையம் ஒன்றையும் அமைத்துள்ளனர்.

இது குறித்து ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பீச் டவுன் தலைவர் வினோத் சர்மா, திட்டத் தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் நம்மிடம் கூறும்போது, “எங்கள் கிளப் மூலம் உழவர்கரை நகராட்சிக்கு சொந்தமான 30 ஆயிரம் சதுரடி இடத்தை பராமரிக்கும் விதமாக 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் ஒன்று 2021-ம் ஆண்டு போடப்பட்டது.

இந்த இடம் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக தொழிற்சாலை குப்பைக் கழிவுகள் கொட்டும் இடமாக இருந்தது. இதையடுத்து இங்கிருந்த சுமார் 300 டன் குப்பைகளை அகற்றிவிட்டு, செம்மண் உள்ளிட்ட மண்களைக் கொட்டி சமன் செய்தோம்.

முதல் கட்டமாக 12 ஆயிரம் சதுரடி பரப்பளவில் பல்வேறு வகையான 1,500 மரக்கன்றுகள் நட்டு, மியாவாக்கி காடாக மாற்றியுள்ளோம். தற்போது அந்த மரக்கன்றுகள் வளர்ந்து சிறு மரங்களாக மாறியிருக்கின்றன. இரண்டாம் கட்டமாக 14 ஆயிரம் சதுரடியில் கடந்த 8 மாதங்களில் சுற்றுச்சூழல் பூங்காவை உருவாக்கியுள்ளோம்.

இதிலும் அசோக மரம், புங்கை, பாக்கு உள்ளிட்ட 750 மரக்கன்றுகள், 300 மூலிகை செடிகள், 500 பூச்செடிகளை நட்டுள்ளோம். மேலும் இந்த வளாகத்தில், இரு 125 அடி ஆழம் கொண்ட மழைநீர் சேகரிப்பு நிலையங்களை அமைத்துள்ளோம். இதன் மூலம் ஆண்டுக்கு 3.5 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும்.

தொழிற்சாலை நிறைந்த பகுதியில் இந்த மியாவாக்கி காடு மற்றும் சுற்றுச்சூழல் பூங்கா ஏற்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் நல்ல சுத்தமான காற்று கிடைக்க உதவும். இதுபோன்ற இடங்கள் அடுத்தடுத்து கிடைத்தால் அங்கும் பசுமையான காடுகளை உருவாக்கும் ஆர்வத்தில் இருக்கிறோம்” என்று தெரிவித்து, அப்பகுதியை நம்மிடம் சுற்றிக்காட்டினர்.

அரசுடன் தன்னார்வ சேவை அமைப்புகள் கைகோர்த்து ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ளும் போது, பல நல்ல விஷயங்கள் நடந்தேறும். அதற்கு பல உதாரணங்கள் உண்டு. இதோ, மேட்டுப்பாளையத்திலும் அதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

SCROLL FOR NEXT