உத்தமபாளையம் புறவழிச் சாலையில் வர்த்தக பகுதியாக மாற்றப்பட்டு வரும் நெல்வயல்கள். 
சுற்றுச்சூழல்

முல்லை பெரியாறு பாசன பகுதிகளில் ‘விலை நிலங்கள்’ ஆக மாறிவரும் விளை நிலங்கள்!

என்.கணேஷ்ராஜ்

உத்தமபாளையம்: முல்லை பெரியாறு அணை மூலம் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் இருபோக விவசாயம் நடைபெற்று வருகிறது. லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் பலன் பெற்று வருகின்றன.

தமிழக கேரள எல்லை என்பதால் ஏற்ற காலநிலை நிலவுவதுடன் வளமான மண் வளம், வற்றாத பாசன நீர் உள்ளிட்ட காரணிகளால் நெல் மகசூல் திருப்தி கரமாகவே இருந்து வருகிறது. நெல் விலையில் ஏற்ற, இறக்க நிலை இருந்தாலும் விளைச்சலில் இந்த வயல்கள் விவசாயிகளை எப்போதும் கைவிட்டதே இல்லை.

இப்பகுதி முழுவதும் விவசாயம் சார்ந்த பகுதியாகவே இருப்பதால் விவசாய பரப்பில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் 2022-ம் ஆண்டு திண்டுக்கல் - குமுளி புறவழிச் சாலை இப்பகுதியில் அமைக்கப்பட்டது. இதற்காக ஏராளமான வயல்கள் சாலைகளாக மாற்றப்பட்டன.

இச்சாலை தமிழக - கேரள மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாகவும் (எண்:183) மாறி விட்டது. இதன் வழியே வெளி மாவட்ட, வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் சென்று வருகின்றனர். மேலும் சபரிமலையில் மகர விளக்கு, மண்டல பூஜை காலங்களிலும் தமிழகம் மட்டுமில்லாது கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த வழியே சென்று திரும்புகின்றனர்.

சுற்றுலா மற்றும் வர்த்தக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் இச்சாலையோரங்கள் வர்த்தக பகுதிகளாக மாறத் தொடங்கின. இதற்காக வளம் மிக்க வயல்வெளிகளில் மண் மேவப்பட்டு பேக்கரி, ஹோட்டல், தங்கும் விடுதிகள், டீ கடைகள், தனியார் சுற்றுலாத் தலங்கள் என்று வெகுவாக மாறி வருகின்றன. தேனி மாவட்ட எல்லையான தேவதானப்பட்டி முதல் லோயர் கேம்ப் வரை வழிநெடுகிலும் இதுபோன்ற நிலை உள்ளது.

மிகக்கடினமான சூழலில் கட்டப்பட்ட முல்லை பெரியாறு அணையால் தென் மாவட்டங்களில் 2 லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் பொது மக்களின் குடிநீர் தேவையையும் இன்றளவும் பூர்த்தி செய்து வருகிறது.

தற்போது நீர் இருந்தும் விளைநிலங்கள் விலைநிலங்களாக மாறிக் கொண்டிருப்பதை தடுக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், குறிப்பிட்ட ஆண்டுகள் விளைச்சல் இன்றி விவசாய பயன்பாடு இல்லாத நிலங்களையே வர்த்தகப் பகுதியாக மாற்ற முடியும். தண்ணீர் வரத்து இருந்தும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் விலை நிலங்களாக மாற்றப்படுகிறது வேதனையானது’ என்றனர்.

SCROLL FOR NEXT