சென்னை: சென்னை கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நூற்றுக்கணக்கான ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன.
சென்னை மெரினா கடற்கரை முதல் நீலாங்கரை கடற்கரை வரை கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதிகளாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிக்கை செய்துள்ளது. இப்பகுதிகளில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை ஏராளமான கடல் ஆமைகள் கரைக்கு வந்து, மணலில் முட்டையிடுவது வழக்கம். அவற்றை வனத்துறையினர் சேகரித்து, குஞ்சு பொரிப்பகங்கள் மூலம், குஞ்சு பொறித்து பிறகு கடலில் விடுகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை கடற்கரை பகுதிகளில் திடீரென நூற்றுக்கணக்கான ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. இது தொடர்பாக மீன்வளத் துறை அதிகாரிகள் கூறும்போது, ``கடலில் ஏற்பட்ட நீரோட்டம் மாற்றம் காரணமாக, இந்த ஆமைகள் ஆந்திர கடல் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக கடலில் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த ஆமைகள் ஓரிரு நாட்களுக்குள் இறந்ததாகத் தெரியவில்லை; பல நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது'' எனத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ``இறந்த ஆமைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. 100-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்திருக்க வாய்ப்புள்ளது. மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். முடிவு வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும்'' என்று கூறினர்.
விதிமீறல்கள்: ஆமைகள் பாதுகாப்பு அமைப்பான ட்ரீ பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் சுப்ரஜா தாரிணி கூறும்போது, ``இந்த ஆமைகள் நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை முட்டையிட வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் ஆந்திரா, ஒடிசா மாநில கடலோர பகுதிக்கு பயணிக்கின்றன. தமிழ்நாடு மின்பிடி ஒழுங்குமுறை சட்டப்படி, கடற்கரையில் இருந்து 8 நாட்டிக்கல் மைல் வரை விசைப்படகுகளில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மீறி மீன் பிடிக்கப்படுகிறது.
ஆமைகள் 45 நிமிடங்களுக்கு ஒருமுறை கடல் நீரின் மேல் பகுதிக்கு வந்து சுவாசித்துவிட்டு மீண்டும் நீருக்குள் சென்றுவிடும். ஆனால் ஆமைகளின் வழித்தடத்தில், விதிகளை மீறி மீனவர்கள் மீன் பிடிக்கும்போது, வலையில் சிக்கி அவை உயிரிழக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த ஆமைகள் மூச்சுத் திணறி உயிரிழக்க நேர்ந்தால் கண்கள் பிதுங்கியும், கழுத்து வீங்கியும் இருக்கும். பிரேதப் பரிசோதனை இல்லாமலேயே இதை தெரிந்துகொள்ளலாம். தற்போது உயிரிழந்து கரை ஒதுங்கும் ஆமைகளிடம் இதைப் பார்க்க முடிகிறது. நாங்கள் சேவையாற்றி வரும் நீலாங்கரை முதல் கோவளம் வரை 183 ஆமைகளும், செம்மஞ்சேரி முதல் ஆலம்பரை வரை 133 ஆமைகளும் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.