சுற்றுச்சூழல்

சென்னையில் காற்றின் தர குறியீடு திருப்தி: 92 முதல் 177 வரை பதிவானதாக தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள மையங்களில் ஜன.12-ம் தேதி முதல் ஜன.13-ம் தேதி காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில், காற்றின் தர குறியீடு அளவு 92 முதல் 177 வரை பதிவானது. இதன்மூலம், காற்றின் தர குறியீடு அளவு திருப்திகரம் முதல் மிதமானதாக இருந்தது கண்டறியப்பட்டது.

இது குறித்து, தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் போகி பண்டிகை நாளில் பழைய பொருட்கள் எரிக்கப்படுகின்றன. எனினும், சமீபத்திய ஆண்டுகளில் பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்களை எரிப்பதனால் காற்று மாசடைகிறது.

அதன் அறிகுறிகளாக சுவாச பிரச்சனைகள், குறைந்த காட்சித்திறன் மற்றும் விமானப் போக்குவரத்து பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தமிழக அரசு நிர்வாகங்கள் இணைந்து, சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டது.

சென்னை பெருநகர மாநகராட்சியின் 15 மண்டலங்களில் பணியாளர்களால் இயக்கப்படும் 15 மையங்கள் செயல்படுகின்றன. இந்த மண்டல மையங்களில் போகி பண்டிகைக்கு முந்தைய நாள் மற்றும் போகி நாளில் 24 மணி நேர காற்று தரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

விழிப்புணர்வு பிரச்சாரத்தின் செயல்திறனை மதிப்பிடு செய்வதற்கும் காற்று தர போக்குகளை கண்காணிப்பதற்கும் இந்த தரவு பயன்படுத்தப்பட்டது. போகியின் முந்தைய நாள் ஜன.9-ம் தேதி முதல் ஜன.10-ம் தேதி காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில், சென்னை மாநகராட்சியின் 15 மையங்களிலும் காற்றின் தர குறியீடு அளவு 45 முதல் 74 வரை பதிவானது. இதன்மூலம், காற்றின் தர குறியீடானது நன்று முதல் திருப்திகரமாக கண்டறியப்பட்டது.

ஜன.12-ம் தேதி முதல் ஜன.13-ம் தேதி காலை 8.00 மணி வரையிலான 24 மணி நேரத்தில், சென்னை மாநகராட்சியின் 15 மையங்களிலும் காற்றின் தர குறியீடு அளவு 92 முதல் 177 வரை பதிவானது. இதன்மூலமாக, காற்றின் தர குறியீடு திருப்திகரம் முதல் சுமாரானதாக கண்டறியப்பட்டது.

மேலும், போகி நாளில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள காமராஜ் உள்நாட்டு முனையம் மற்றும் அண்ணா சர்வதேச முனையம் விமான நிலையங்களில் காற்றின் தர குறியீடானது திருப்திகரம் முதல் மிதமானதாக அளவில் இருந்ததால், விமான இயக்கத்தில் எந்த இடையூறும் ஏற்படவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT