கூடலூர்: பந்தலூரில் பிடிபட்ட புல்லட் யானையை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அறிவியல் சார்ந்த அணுகுமுறைகளில் குறைந்த மனித இடையூறுகளுடன் கண்காணிக்கப்பட்டு, பின் அடர் வனப்பகுதியில் கொண்டு விடப்படும் என கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியது: “நீலகிரி மாவட்டம், கூடலூர் வனக்கோட்டம், சேரம்பாடி மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒரு காட்டு யானை பொதுமக்களின் குடியிருப்புகளை தொடர்ந்து சேதம் செய்து வந்தது. பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் யானையின் நலனை கருத்தில் கொண்டும் இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக 24 மணி நேரமும் கூடலூர் வனக்கோட்டத்தைச் சார்ந்த அனைத்து முன்களப்பணியாளர்களும், இதர கோட்ட முன் களப்பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து சிறப்பு பயிற்சி பெற்ற யானை விரட்டும் காவலர்களுடன் பொம்மன், விஜய் மற்றும் ஸ்ரீனிவாசன் என மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. மேலும் நான்கு ட்ரோன் கருவிகள் பயன்படுத்தப்பட்டு யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வரப்பட்டது.
வனத்துறை மூலம் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், யானையின் நலனை பாதுகாக்கவும், இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக இரவு பகலாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், ஒரு சில பகுதிகளில் குடியிருப்பு சேதம் தொடர்ந்தது.
இந்நிலையில், முதன்மை தலைமமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனஉயிரின காப்பாளர் உத்தரவு படி முதுமலை புலிகள் காப்பக வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநரின் கண்காணிப்பில் கூடலூர் வனக்கோட்ட மாவட்ட வன அலுவலரின் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு, அனுபவம் வாய்ந்த கால்நடை மருத்துவர் கலைவாணன் குழுவினரால் நேற்று மாலை கொளப்பள்ளி அய்யங்கொல்லி பகுதியில் இந்த காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
யானை பிடிக்கும் பணியின் பாதுகாப்பிற்காக உதகை காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பிடிபட்ட காட்டு யானையை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அறிவியல் சார்ந்த அணுகுமுறைகளில் குறைந்த மனித இடையூறுகளுடன் கண்காணிக்கப்பட்டு, பின் அடர் வனப்பகுதியில் கொண்டு விடப்படும்” என்று அவர் கூறினார்.