ஐயனார் குளத்தின் தற்போதைய நிலை. 
சுற்றுச்சூழல்

63.5 செ.மீ மழை பெய்தும் விழுப்புரம் நகரில் நிரம்பாத கோயில் குளம்!

எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் காரணமாக, விழுப்புரம் நகரில் 63.5 செ.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனாலும் நீர்நிலைகள் சரிவர பராமரிக்கப்படாததால் இந்த அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தும் சில நிரம்பாமல் இருக்கிறது. அதற்கு ஆகச் சிறந்த உதாரணம் விழுப்புரம் நகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் ஐயனார் கோயில் குளம். திருவிக சாலையையொட்டி 4.16 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கோயில் குளம், விழுப்புரம் நகரத்தின் முக்கிய நீர் நிலையாக திகழ்ந்து வருகிறது.

28.11.1962 அன்று நடந்த விழுப்புரம் நகர்மன்றக் கூட்டத்தில் “பெண்ணையாற் றில் இருந்து விழுப்புரம் நகர் வழியாகச் செல்லும் கோலியனூர் வாய்க்காலில் வரும் நீரை இந்நகருக்கு மையத்தில் இருக்கும் ஐயனார் குளத்துக்கு கொண்டு வந்து நிரப்பினால், நகரில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் உயரும். மக்களுக்கு தேவைப்படும் நீரை மேற்படி வாய்க்காலில் கொண்டு வர மாவட்ட ஆட்சியர் நிரந்தர உத்தரவு கொடுக்க வேண்டும்” என உறுப்பினர் வேணுகோபால் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.

இதன்படி தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் கோலியனூர் கால்வாயில் பெருக்கெடுத்து ஓடிவரும் நீரின் ஒரு பகுதி இக்குளத்தை வந்தடையும் வகையில், தனி நீர்வழிப் பாதை அமைக்கப் பட்டது. தெற்கு ஐயனார் குளத்தெருவில் இருந்த கால்வாய் வழியாக வெள்ள நீர் குளத்துக்குள் பாய்ந்ததை விழுப்புரம் நகரவாசிகள் பலரும் இப்போதும் நினைவில் வைத்துள்ளனர். காலப்போக்கில் இந்தக் குளத்துக்கு நீர் வரும் பாதைகள் அடைக்கப்பட்டன. இதனால் குளத்துக்கு கோலியனூர் கால்வாய் நீர் வருவது முற்றிலும் தடைபட்டது.

2021-ம் ஆண்டு நவம்பரில் குளத்தின் நீர் வரத்தை ஆய்வு செய்த
அப்போதைய ஆட்சியர் மோகன் (கோப்பு படம்)

இதற்கிடையில், 2004-ம் ஆண்டு ஆட்சியராக இருந்த கோபால், இக்குளத்தை மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் மாறுதலாகி சென்றதால் அந்தப் பணி தடைபட்டது. கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய ஆட்சியர் மோகன் இக்குளத்துக்கு கிழக்கு, வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் இருந்து மழை நீர் வருவதற்கான நடவடிக்கையில் இறங்கினார்.

இந்த முயற்சியும் தொடராமல் முடங்கிப் போனது. இதனால் எவ்வளவு மழை பெய்தா லும், நகரத்தைச் சுற்றிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்தாலும் குளம் நிரம்புவது இல்லை. அண்மையில், ஃபெஞ்சல் புயலால் பெய்த பலத்த மழையின் போதும் இக்குளம் மட்டும் நிரம்பாத சோகம் தொடர்கிறது.

இது குறித்து விழுப்புரம் ஐயனார் கோயில் குளம் மீட்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவனிடம் கேட்ட போது, “ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள் மற்றும் குளங்கள் என்பது நீர் மேலாண்மையின் தொடர் சங்கிலிகள். இதில், குளம் எனும் சங்கிலி விழுப்புரம் நகரத்துக்குள் திட்டமிட்டு அறுக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் கலக்கும் எனும் காரணத்தைக் காட்டி இந்தக் குளத்துக்கு நீர் வரும் வரத்துக் கால்வாய்களை அடைத்து வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

1996-ம் ஆண்டு ‘இது நகராட்சிக்குச் சொந்தமான இடம்' என குளத்தைச் சுற்றிலும் போர்டு வைத்து, ஐயனார் குளத்துக்கு உரிமை கொண்டாடிய நகராட்சி நிர்வாகமோ அல்லது மாவட்ட நிர்வாகமோ ஐயனார் குளத்தின் மீது இதுநாள் வரையில் அக்கறை காட்டாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

இதற்கான காரணம் புரியவில்லை. தொடர்ந்து போராடி வருகிறோம். குப்பைகளால் முழுவதும் தூர்ந்து விடும் என எண்ணியிருந்த நிலையில், விழுப்புரம் பூந்தோட்டம் குளம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீட்கப்பட்ட அதிசயம் நடந்தது. உண்மையிலேயே அதுபோன்ற அதிசயம் ஐயனார் குளத்திலும் நிக ழுமா! ஐயனார் குளமும் மீட்கப்படுமா! இது எப்போது நடக்கும் என காத்திருக்கிறோம்” என்கிறார்.

SCROLL FOR NEXT