சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வெள்ள நீர் வடியும் வகையில் எண்ணூர், கூவம், அடையாறு, முட்டுக்காடு முகத்துவாரங்களில் ரூ.252.94 கோடியில் மணல் படிமங்கள் அகற்றப்பட்டு, ஆழப்படுத்தப்பட்டுள்ளதாக நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீர்வளத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகத்துவாரங்களை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்த அறிக்கை விவரம்: சென்னை வடிநிலத்தில் அமைந்துள்ள கொசஸ்தலையாறு, கூவம், அடையாறு மற்றும் கோவளம் வடிநிலப்பகுதிகளில் இருந்து வடியும் வெள்ள நீரானது எண்ணூர், கூவம், அடையாறு, முட்டுக்காடு கழிமுகத்துவாரம் வழியாக வடிந்து, வங்காள விரிகுடாவை அடைய வேண்டும்.
இயற்கையான கடல் நீரோட்டத்தால் கொண்டுவரப்படும் மணல் படிவங்கள் இம்முகத்துவாரத்தை அடைத்து மழைக்காலங்களில் வெள்ள நீரையும் மற்ற காலங்களில் கழிவுநீரையும் கடைநிலை சேராமல் தடுக்கிறது. எனவே, மணல் திட்டு அடைப்புகளால் இம்முகத்துவாரங்களில் ஏற்படும் பாதிப்பைதடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலையாறு, வடக்கு பக்கிங்காம் கால்வாய், புழல் ஏரி உபரி நீர் கால்வாய் ஒன்றாக கலக்கும் எண்ணூர் முகத்துவாரம், 160 மீட்டர் அகலம் கொண்டது. இருப்பினும், மணல் திட்டு அடைப்பால் 35 மீட்டர் அகலம் மட்டுமே நீரோட்ட பகுதியாக இருந்தது. ரூ.155 கோடி மதிப்பில் இப்பகுதியில் 5.30 லட்சம் கன மீட்டர் மணல் திட்டுக்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.
அதே போல், கூவம், வடக்கு மற்றும் மத்திய பக்கிங்காம் கால்வாய் ஒன்றாக கலக்கும் கூவம் முகத்துவாரம் 90 மீட்டர் அகலம் இருந்தாலும், மணல் திட்டால் 40 மீட்டர் மட்டுமே நீரோட்ட பகுதியாக உள்ளது. இங்கு ரூ.70 கோடி மதிப்பில் 1.75லட்சம் கனமீட்டர் மணல் திட்டுக்கள் அகற்றப்பட்டு 6 அடி ஆழத்துக்கு அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடையாறு,மத்திய மற்றும் தெற்கு பக்கிங்காம் கால்வாய் ஒன்றாக கலக்கும் அடையாறு முகத்துவாரத்தில் மல் திட்டு அடைப்பால், வெளள நீர் செல்லவில்லை. இங்கு ரூ. 11.94 கோடியில் 2 லட்சம் கன மீட்டர் அளவுக்கு மணல் படிமங்கள் அகற்றப்பட்டு 5 அடி ஆழத்துக்கு அகழ்வு செய்யப்பட்டுள்ளது.
அதே போல், ஒக்கியம் மடுவு, ஏகாத்தூர் மடுவு, தையூர் உபரிநீர் கால்வாய் வழியாக சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து வடிந்து வரும் வெள்ள நீர் தெற்கு பக்கிங்காம் கால்வாய் வந்து, முட்டுக்காடு முகததுவாரத்தில் கடலை அடைகிறது. இங்கு ரூ.16 கோடி மதிப்பில் மணல் திட்டுக்கள் அகற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம், இந்த முகத்துவாரங்களில் வெள்ள நீர் விரைவாக வடிய ஆவண செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நீர்வளத்துறை தயார் நிலையில் உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.