சென்னை: ஊட்டி மற்றும் கொடைக்கானலில் பயணிகள், வாகனங்களின் தாங்குதிறன் குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்களுக்கு அனுமதியளித்து, தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணை விவரம்: கடந்த மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில், நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சுற்றுலாப் பகுதிகளில் எவ்வளவு சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்தும்படி தெரிவித்தது. இதையடுத்து, மார்ச் 27ம் தேதி தலைமைச்செயலர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் முடிவுப்படி, ஐஐடி, ஐஐஎம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மூலம் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டது.
சுற்றுலா, போக்குவரத்து, நெடுஞ்சாலை, வனம் மற்றும் சுற்றுச்சூழல், வீட்டுவசதி, புவியியல் துறைகள் இணைந்த பன்முக ஆய்வு நடத்தவும், இரு வேறு அமைப்புகள் தனித்தனியாக ஆய்வினை மேற்கொள்ளவும், அந்த பகுதிகளில் மனிதர்கள் தாங்குதிறன், சுற்றச்சூழல் மற்றும் கட்டமைப்பு தாங்குதிறன் குறித்து ஆய்வு நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது. இதையடு்த்து, ஆய்வு மேற்கொள்ள சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டன. இரு நிறுவனங்களும் அனுப்பிய கருத்துருவில் ஐஐடி ரூ.2.09 கோடியும், பெங்களூரு ஐஐஎம் ரூ.1.51 கோடியும் நிதி வழங்க கோரின.
இவற்றை பரிசீீலித்த தமிழக அரசு இரு நிறுவனங்களுக்கும் அனுமதியளித்து, நிதியையும் ஒதுக்கியுள்ளது. மேலும், இந்த ஆய்வுகளை வரும் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னதாக தொடங்கவும், ஓராண்டுக்குள் இடைக்கால அறிக்கையையும், அதன்பின் வழங்கப்பட்ட கால அளவுக்குள் முழு அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தாங்கும் திறன் குறித்த தோராயமான எண்ணிக்கையை அடுத்த சீசன் தொடங்கும் ஏப்ரல் மாதத்துக்குள் அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.