உதகை: ஐரோப்பிய நாடுகளின் காலநிலையை ஒத்திருப்ப தால், நீலகிரி மாவட்டத்துக்கு அந்நாடுகளின் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர். அதேபோன்று, வெளிநாட்டு பறவையினங்களும் வலசை வருகின்றன. குறிப்பாக, ஆண்டுதோறும் குளிர் காலத்தில் இனப்பெருக்கத்துக்காக ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால், இந்தாண்டு பனிப்பொழிவு தாமதமாகியுள்ளது.
இந்நிலையில், பறவைகளின் வருகை தற்போதுதான் தொடங்கியுள்ளதால், இனப்பெருக்கத்துக்காக வரும் பறவைகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அவ்வாறு வரும் பறவைகள், அதிகளவில் உதகை ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள சதுப்பு நிலங்கள், தலைகுந்தா பகுதியிலுள்ள காமராஜ் சாகர் அணை ஆகிய பகுதிகளில் காணப்படும். இங்கு கூடுகட்டி முட்டையிட்டு, குஞ்சு பொறித்த பின்னர், சொந்த நாடுகளுக்கு திரும்பிவிடும். தற்போது ஐபிஸ் எனப்படும் அரிவாள் மூக்கன் பறவை அதிகளவு காணப்படுகின்றன.
மியான்மர், வடகிழக்கு அசாம் மாநிலத்தில் இருந்து வந்துள்ள புள்ளி மூக்கு வாத்து (ஸ்பாட் பில் டக்), வங்கதேசம், பாகிஸ்தான், மியான்மர் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் காணப்படும் உண்ணி கொக்கு (கேட்டில் ஈகிரட்), நாமக் கோழி (காமன் கூட்) வகை பறவைகளும் வந்துள்ளன. குளிர் காலத்தில் மேலும் பல பறவையினங்கள் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் என்கின்றனர் பறவையியல் ஆர்வலர்கள்.
இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, “இந்தாண்டு பனிப்பொழிவு தாமதமாகியுள்ளதால், சில பறவையினங்களே நீலகிரிக்கு வந்துள்ளன. வாலாட்டி குருவி, உள்ளான், உட் காக், நாமக்கோழி, நீர்க் கோழி, ஸ்பாட் பில் டக், கிரே ஹெரன், சாம்பல் நிற நாரை பறவைகள் அதிகளவில் காணப்படுகின்றன. உட் காக் பறவை, மிகவும் அரிதானது. அதேபோல், ஸ்பாட் பில் டக் எனப்படும் வாத்து அரிதாக காணக்கூடியது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த வாத்துகள் சொந்த நாடு திரும்பாமல் உதகை ஏரி, அரசு தாவரவியல் பூங்கா, தலைகுந்தாவில் உள்ள நீர்நிலைகளிலேயே உள்ளன. இங்கேயே தங்கியுள்ளதால் அவற்றின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இந்த சூழல் அவற்றுக்கு ஏற்றதாக மாறியுள்ளதே, நாடு திரும்பாததற்கு காரணமாக இருக்கலாம்.
குளிர் காலம் தொடங்கியுள்ளதால், வரும் நாட்களில் அதிகளவிலான பறவையினங்கள் நீலகிரிக்கு வரும்” என்றனர். பல வண்ணங்களில் பல ரகங்களில் பறவையினங்கள் உதகை ஏரியை முற்றுகையிட்டுள்ளதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பறவைகளை கண்டு ரசிக்கின்றனர்.