மதுரை: "வைகை ஆற்றில் மொத்தம் கழிவு நீர் நேரடியாக கலக்கிறது. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று ஆய்வு அறிக்கையை மதுரை ஆட்சியர் சங்கீதாவிடம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வழங்கினர்.
சங்க இலக்கியங்களால் புகழப்பட்ட வைகை ஆறு, தென் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களை வளப்படுத்துகிறது. வைகையாறு மேற்கு தொடர்ச்சி மலையில் மேகமலை, வருசநாடு பகுதியில் தோன்றி 295.11 கி.மீ தூரம் பயணித்து, கடைசியில் ராமநாதபுரத்தில் கடலில் கலக்கிறது. சித்திரை திருவிழா, புட்டு திருவிழா, திருமஞ்சம் நீராட்டு, ஆடிப்பெருக்கு நீராடல், ஜனகை மாரியம்மன் அம்பு போடுதல் திருவிழா, மாரியம்மன் தெப்ப திருவிழா, முளைப்பாரி கொட்டுதல், புரவி எடுத்தல், நீர்மாலை எடுத்தல், திதி கொடுத்தல் உள்ளிட்ட திருவிழாக்கள், சடங்குகள் வைகையாற்று நீரை சார்ந்து இன்றும் நடக்கின்றன.
தற்போது இந்த வைகை ஆறு, ஆக்கிரமிப்புகளால் சுருங்கி மணல் முழுமையாக அள்ளப்பட்டுவிட்டதால் நீரோட்டம் குறைந்து, நிரந்தர வறட்சிக்கு இலக்காகி உள்ளது. தற்போது கழிவு நீரும் அதிகளவு கலப்பதால், வைகை ஆற்றில் வாழும் உயிரினங்களுக்கும், அதன் நீர் ஆதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து நேர்ந்துள்ளதாக, இந்த ஆற்றை ஆய்வு செய்த மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையின் நிர்வாகிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுமான ரவீந்திரன், விஸ்வநாத், கார்த்திகேயன், தமிழ்தாசன் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவர்கள் தலைமையில் தன்னார்வலர்கள், தேனி மாவட்டம் மூல வைகையில் வாலிப்பாறை தொடங்கி வைகையாறு கடலில் கலக்கும் கழிமுக பகுதியான ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை ஊராட்சி வரை ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கி செப்டம்பர் 6ம் தேதி வரை தொடர்ந்து பத்து நாட்கள் இந்த ஆய்வை மேற்கொண்ட இவர்கள், ஆய்வு அறிக்கையை, ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து வழங்கினர்.
இந்த ஆய்வில் அவர்கள் கண்டறிந்த விவரங்கள் பற்றி அவர்கள் கூறியது: "தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டம் வைகையாற்றங்கரையில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் உள்ள 200 ஊர்களை பட்டியலெடுத்து, அதில் 134 ஊர்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்தோம். இந்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நீரின் தரத்தை ஏ, பி, சி, டி, இ என்று ஐந்து வகைகளாக தரம் பிரித்துள்ளது. அதில் ‘ஏ’ வகை நீர் காய்ச்சிவிட்டு, நேரடியாக குடிக்கும் நீராக வகைப்படுத்தப் பட்டுள்ளது.
‘பி’ வகை நீர் குளிக்க பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது. ‘சி’ வகை நீர் சுத்திகரிப்பு செய்து குடிக்க பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது. ‘டி’ வகை நீர் கால்நடைகளுக்கும், மீன்கள் வளர்ப்பிற்கும் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது. ‘இ’ வகை நீர் வேளாண்மை, தொழிற்சாலை உற்பத்திக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று குறிப்பிடுகிறது. ஐந்து மாவட்டங்களை வளப்படுத்தும் வைகையாற்றில், இந்த மாவட்டங்களில் 36 இடங்களில் ஆற்றின் நீர் மாதிரிகளை எடுத்து பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பி பரிசோதனை செய்தோம்.
நாங்கள் சேகரித்த 36 மாதிரிகளில் ஒன்றுக் கூட ஏ, பி, சி வகை நீர் தரத்தில் இல்லை. இதில் குடியிருப்பு பகுதிகள் இல்லாத மூலவைகை நீரின் மாதிரியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சேகரித்த 36 நீர் மாதிரிகளில் 8 நீர்மாதிரிகள் ‘டி‘ வகை தரத்திலும், 23 நீர் மாதிரிகள் ‘இ’ வகை தரத்திலும் இருந்தன. அதிர்ச்சியூட்டும் விதமாக 5 நீர்மாதிரிகள் ‘இ’ வகை நீர் தரத்திற்கும் கீழான தரத்தில் இருந்தன. குடிநீர், குளியல் நீர், கால்நடைக்கான குடிநீர், பல்லுயிரிகளுக்கான வாழ்வாதார நீர், சலவை நீர், பாசன நீர், சடங்குகளுக்கான புனித நீர், நன்னீர் உயிரினங்களின் வாழிட பகுதி என மனிதர்களோடும் இதர உயிரிங்களோடும் நேரடியாக பல பயன்பாடுகளை கொண்ட வைகையாற்று நீரின் தரம் மேம்படுத்தப்பட வேண்டும்.
காவிரியில் காணப்படும் நீர்நாய்கள் Lutrogale perspicillata) வைகையாற்று நீரில் காணப்படுகிறது. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) அழியவாய்ப்புள்ள இனமாக (Vulnerable) ஆற்று நீர்நாய்களை வரையறை செய்துள்ளதால், வைகை ஆற்றின் நீர்நாய்களின் வாழிடங்களை பாதுகாக்க உரிய முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். நீர்நாய்கள், மான்கள், கீரிகள் உள்ளிட்ட 35 வகையான பாலூட்டி வகை காட்டு விலங்குகள் வைகையாற்றை வாழிடமாகவோ, நீராதாரமாகவோ கொண்டு வாழ்வதை, இந்த ஆய்வில் ஆவணம் செய்துள்ளோம்.
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தால் (IUCN) அழிவை சந்திக்கும் செம்பட்டியலில் (Redlist) வகைப்படுத்தப்பட்டுள்ள 18 வகை காட்டுயிர்கள் அதில் அடங்கும். வைகையாற்றங்கரையில் ஆவணம் செய்த 67 வகையான தாவரங்களில் 45 வகை மரங்கள், 6 வகை செடிகள், 3 வகை கொடிகள், 4 வகை புற்கள், 2 வகை நீர்தாவரங்கள், 4 வகை அலையாத்தி காட்டு தாவரங்கள் உள்ளன. மரங்கள் சூழ்ந்திருந்த வைகை ஆற்றங்கரை இன்று வெட்டவெளியாக, குடியிருப்புகளாக, பாசன பரப்புகளாக மாறிவிட்டன. மதுரை மாநகரில் வைகையின் இருக்கரையில் 8 கி.மீ தொலைவிற்குள் ஆற்றங்கரையில் மரங்களே இல்லை. ஆற்று நன்னீரில் மட்டுமே காணப்படும் காஞ்சி மரங்கள் துவரிமான் பகுதியில் மட்டுமே காணப்படுகிறது.
ஆற்றின் கரைகளில் அடர்ந்து இருந்த பழமையான மருதம், கடம்பம், நாவல், புங்கை உள்ளிட்ட மரங்கள் அகற்றப்பட்டுவிட்டன. மாசுபட்ட நீரில் வளரக்கூடிய சம்பை புல்லும், ஆகாயத்தாமரை செடியும் பரவலாக மதுரை நகரில் காணப்படுகிறது. இத்தாவரங்களின் பரவல் மதுரை நகரில் நீர் மாசுபாடு அதிகரிக்கிறது என்பதற்கான அறிகுறிகளாக விளங்குகின்றன.
வைகையாற்றில் 175 வகை பறவைகளை ஆவணம் செய்தோம். இதில், 12 வகை பறவைகள் அழிவை சந்திக்கும் செம்பட்டியலில் (Red List) வகைப்படுத்தப்பட்ட பறவைகளாக உள்ளன. 11 வகை அயல் மீன்கள் உள்பட 58 வகையான நன்னீர் மீன்கள் ஆவணம் செய்தோம். அதில்11 வகை மீன்கள் அழிவை சந்திக்கும் உயிரிகளாக செம்பட்டியலில் (IUCN - Redlist) வகைப்படுத்தப்பட்டுள்ளன.
1989ம் ஆண்டு இந்திரா என்பவரால் ஆவணம் செய்யப்பட்ட வைகை மீன்கள் பட்டியலில் உள்ள 19 வகை நன்னீர் மீன்கள் எங்கள் ஆவணத்தில் கண்டறிய முடியவில்லை. அவை அழிந்துவிட்டனவா அல்லது அருகிவிட்டதா என்பதை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். வைகையாற்றில் காணப்பட்ட பழமையான மரங்கள், படித்துறைகள் அகற்றப்பட்டுவிட்டன.
மதுரை மாநகரில் வைகையாற்றின் இருக்கரைகளிலும் சாலைகள் விரிவாக்கப்பட்டு ஆற்றின் இயல்பான அகலம் சுருக்கப்பட்டுள்ளது. இதனால் பேரிடர் வெள்ள காலங்களில் கரைகளை கடந்து வெள்ளநீர் குடியிருப்புகளுக்கு புகும் நிலை ஏற்படலாம். மதுரை மாநகரின் இருகரைகளும் சிமிண்ட் மூலம் பலப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆற்றின் பக்கவாட்டு நீர் ஊடுபரவலை தடுக்கும்.
தேனி நகராட்சி, மதுரை மாநகராட்சி, இராம்நாடு நகராட்சி தவிர வைகையாற்றங்கரையில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சியில் எங்குமே பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப் படவில்லை. அதன் காரணமாக வைகையாற்றங்கரையில் உள்ள இதர நகர, ஊரக நிர்வாகங்கள் கழிவுநீரை ஆற்றுக்குள் நேரடியாக திறந்து விடும் அவலம் நீடிக்கிறது. தேனி மாவட்டம் வாலிப் பாறை முதல் இராம்நாடு மாவட்டம் ஆற்றங்கரை வரை சுமார் 177 இடங்களில் 197 குழாய்கள் மூலம் வைகையாற்றுக்குள் கழிவுநீர் நேரடியாக கலப்பதை ஆவணம் செய்துள்ளோம்.
தேனியில் 18 இடங்கள், திண்டுக்கல்லில் 2 இடங்கள், மதுரையில் 64 இடங்கள், சிவகங்கையில் 29 இடங்கள், ராமநாதபுரத்தில் 64 இடங்கள் என மொத்தம் 177 இடங்களில் வைகையாற்றில் கழிவுநீர் நேரடியாக கலக்கிறது" என்று அவர்கள் தெரிவித்தனர்.
பேரிடர் வெள்ளம் ஏற்பட்டால் வைகை ஆறு தாங்குமா? - அவர்கள் மேலும் கூறுகையில், "கடந்த ஜூலை மாதம் வயநாடு நிலச்சரிவில் சுமார் 420 பேர் உயிரிழந்தனர். அதேபோல வைகையாற்றின் உற்பத்தி பகுதியான மேகமலையில் 1992-ம் ஆண்டு நவம்பர் மாதம் நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 35 பேர் வரை இறந்து போன துயரமான நிகழ்வு நடைபெற்றதாக அரசு குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. வாலிப்பாறையில் உள்ள மக்கள் மேகமலை நிலச்சரிவில் கிருசக்காடு என்கிற மலைக்கிராமமும், அதில் வசித்த 160 மக்களும் இறந்து போனார்கள் என்று தெரிவித்தனர்.
1992ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் வைகையாறும் சாத்தையாறும் பெருகி பல்வேறு குடியிருப்புக்குள் நீர் சூழ்ந்த கொண்டன. 1992ம் ஆண்டு இருந்த வைகையாற்றின் அகலத்தில் கால்வாசியை சாலை விரிவாக்கத்திற்கு பறிகொடுத்துவிட்டோம். மீண்டும் பேரிடர் வெள்ளம் ஏற்பட்டால் வைகையாறு தாங்குமா என்று மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் சிந்தித்து அதற்கான நகரமைப்பை வடிவமைக்க வேண்டும். வைகை ஆற்றை ஆக்கிரமிப்பு, கழிவு நீர் கலப்பு உள்ளிட்ட சிக்கல்களில் இருந்து தடுத்து, மேம்படுத்த தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.