சுற்றுச்சூழல்

சென்னையில் 156.48 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்: மாநகராட்சி தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் தீபாவளி பண்டிகை தினமான அக்.31-ம் தேதி மதியம் முதல் இன்று (நவ.1) மதியம் பகல் 12 மணி வரையில், 156.48 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று (அக்.31) தீபாவளி பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீபாவளி பண்டிகையை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். சென்னையில் தீபாவளி பண்டிகையை மக்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். பட்டாசு கழிவுகளை அகற்றும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் நேற்று முதலே ஈடுபட்டனர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘சென்னையில் தீபாவளி பண்டிகை தினமான அக்.31ம் தேதி மதியம் முதல் இன்று (நவ.1) மதியம் பகல் 12 மணி வரையில், 156.48 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. இதில் ஆபத்து மிகுந்த பட்டாசுக் குப்பைகளை, மாநகராட்சி பணியாளர்கள் பிரத்யேகமான பைகளில் சேகரித்தனர். அவ்வாறு சேகரிக்கப்பட்ட ஆபத்து மிகுந்த பட்டாசு குப்பைகளை அகற்றும் வசதிகளைக் கொண்ட கும்மிடிப்பூண்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT